நவீன இந்தியாவின் அரிய சிந்தனையாளர்களில் ஒருவர் தீன்தயாள் உபாத்யாயா. ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தனது அரசியல் தத்துவத்தின் மூலம் இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமாற்று செயல்திட்டத்தை உருவாக்கியவர் இவர். முதலாளித்துவம், கம்யூனிசத்தின் மேலாதிக்க சித்தாந்தங்களை முறையாகவும் தர்க்கரீதியாகவும் நிராகரித்தவர்.
பாரதிய சிந்தனை மாதிரியை, அறிவார்ந்த பாதையை நமக்கெல்லாம் வழங்கியவர். உண்மையான பாரதிய அணுகுமுறையைப் பின்பற்றி, பாரத மக்களாக மாற இந்தியர்கள் அனைவரையும் வலியுறுத்தினார். பாரதியம் என்பது நமது கலாச்சாரம், நெறிமுறைகள், சுற்றுச் சூழல், சொந்த வளங்கள், நமது பலம் மற்றும் தனிப்பட்ட திறமை ஆகியவற்றில் பொதிந்துள்ளது என்றார்.
தீன்தயாள் எளிமையையும் நேர்மையையும் வாழ்க்கையின் நெறிமுறையாகக் கொண்டவர். இவரும் நானாஜி தேஷ்முக்கும் ஒருநாள், காலையில் சந்தைக்கு காய்கறிகளை வாங்கச் சென்றிருந்தனர். அப்போது இரண்டு பைசா மதிப்புள்ள காய்கறிகளை வாங்கிவிட்டு பதிலுக்கு, தனது சட்டைப் பையில் இருந்த ஒரு செல்லாத நாணயத்தை தீன்தயாள் காய்கறி வியாபாரிக்குத் தவறுதலாகக் கொடுத்துவிட்டார். வீட்டுக்கு திரும்பி வரவிருந்த போது அதை அறிந்து கொண்ட தீன்தயாள் குற்ற உணர்வும் வேதனையும் கொண்டார். எனவே அவருக்கு நல்ல நாணயத்தைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, மீண்டும் காய்கறி வியாபாரியிடம் சென்று உண்மையைச் சொன்னார். ஆனால், வியாபாரிக்கோ அந்தச் செல்லாத நாணயத்தைத் தேட நேரமில்லாததால் திரும்பிச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அந்தச் செல்லாத நாணயத்தை தீன்தயாளே தேடிக் கண்டுபிடித்து அதற்குப் பதிலாக நல்ல நாணயத்தை அவரிடம் மாற்றிக் கொடுத்தார். அப்போது தான் அவர் மனநிறைவு அடைந்தார். இந்த செய்தி தீன்தயாளின் நேர்மையுள்ளத்தைப் புலப்படுத்துவதற்கு ஒரு சான்று.
முனைவர். பூ. தர்மலிங்கம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை, அழகப்பா பல்கலைக்கழகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் பலிதான தினம் இன்று