பீடிக்கு நெருப்பா, வீடுதான் பற்றி எரியுதே!

மதுரையைச் சேர்ந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்தவர். அமைச்சர், அமெரிக்காவைப் போன்றே இந்தியாவையும் நினைத்துவிட்டார். “ஒன்றியம்” என்று நம் தேசத்தை அழைக்கச் சொல்கிறார் மனிதர்! சுமார் 500 ஆண்டு கால வரலாறே கொண்ட அமெரிக்கா என்ற தேசம், பல மாகாணங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையால் உருவானது. சிறிய புத்தகமாக இருக்கும் அதன் அரசியல் சாசனம், அந்த மாகாணங்களுக்கு தனித்த அதிகாரம் கொடுத்துள்ளது. ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றாலும், மாகாண சபைகள் அதை அங்கீகரித்தால்தான் அவர் பதவியேற்க முடியும்.

ஆனால், பாரத நாட்டின் அரசியல் சாசனம் அப்படியல்ல. 1947ல் நாடு சுதந்திரம் பெற்றதும், சிறுசிறு மன்னராட்சிப் பகுதிகளாக இருந்த 543 சமஸ்தானங்களும் பாரத நாட்டுடன்தான் இணைந்தன. எந்தவொரு மாநிலத்துடனும் தனியாக இணையவில்லை. நிர்வாக வசதிகளுக்காக மொழிவாரி மாநிலங்களாக 1956ல் பிரிக்கப்பட்டன. ஒரே மொழியாக இருந்தாலும் தெலங்கானா, உத்தராகண்ட், ஜார்க்கண்ட் போன்றவை தனி மாநிலங்கள்! எல்லாம் நிர்வாக வசதிக்காக. இதுதான் இங்குள்ள நிலவரம். ராஜேந்திர சோழன் இமயமலை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டினாரே… அசோகர் முதல் முகலாயர்கள் வரை பலரும் பாரதத்தை ஆண்டார்களே… அதெல்லாம் 1947ல் “சுதந்திர இந்தியா” பிறப்பதற்கு முன்பே. அப்படியிருக்க, இந்திய ஒன்றியம் என்று இன்று பேசினால் மக்கள் கைகொட்டிச் சிரிப்பார்களே என்ற கூச்சம் கூட “ஒன்றிய”க் கூத்து அடிப்பவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதுதான் தமாஷ்.

தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார் ஒருவர். வீட்டிற்குள் நுழையும்போது ஒரு ஆணிடம் உறவினர் மனைவி பேசிக் கொண்டிருந்தார். “இவர் என் வீட்டுக்காரர்” என்று அந்த ஆணை வந்தவருக்கு அறிமுகப்படுத்தினார் அந்தம்மா. உறவினர் வீட்டில் அனைவரும் தெரியுமென்பதால் திடுக்கிட்டார் வந்தவர். பிறகுதான் புரிந்தது. உறவினர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரவர் என்று! ’ஒன்றிய’ ஆசாமிகளை வசமாகக் கிண்டலடித்து இப்படி ஒரு இடக்கு வாட்ஸ்அப் பதிவு!!

அமைச்சர் தியாகராஜனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியினரும் அவர்களின் சார்பு ஊடகங்களும் “இந்திய ஒன்றியம்” என்று உளறிக் கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் அதை ஏற்பதாக இல்லை என்பது தெளிவாகி வருகிறது. பண்டைய தமிழகம் என்பது 14 ‘நாடு’களைக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டி ”தமிழகமே ஒன்றியம் தான்” என்பதை சமூக வலைதளங்களில் நையாண்டியாகவும் விரிவாகவும் பதிவு செய்திருப்பது மக்களின் அதிரடி பதிலடி. சீனக் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது; கேரள- – கர்நாடக எல்லைப் பகுதி நெடுக உள்ள ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களைத் தாக்க மாவோயிஸ்டுகள் திட்டமாம்; எச்சரித்திருப்பது மத்திய உளவுத் துறை! இந்த லட்சணத்தில் தமிழகத்தின் சட்டம்-–ஒழுங்கு காக்கும் கடமையுள்ள ஆளும் கூட்டம் பிரிவினை நெடி வீசும் “ஒன்றிய”க் கூத்தடிப்பதில் மும்முரமாக இருப்பது கேவலம். மாநிலத்திற்கு இந்த அவலத்திலிருந்து விடியல் எப்போது என்பதுதான் கேள்வி.

-சந்திர.பிரவீண்குமார்