ஆமாம்! நாங்க தமிழ்ச் சங்கி தான் 7

பழந்தமிழில் படைப்புக் கடவுள்

பத்மன்

வேதத்தை அடிப்படையாகக் கொண்ட சனாதன ஹிந்து தர்மத்தில் ஆதியும் அந்தமுமான பரம்பொருள் ஒன்றே, அதுவே பிரும்மம். இந்த பிரும்மத்தை பரமேஸ்வரனாகிய சிவபெருமான் என்று சிலர் அழைப்பர், மகாவிஷ்ணுவாகிய பெருமாள் என்று வேறு சிலர் அழைப்பர். மகாசக்தி என்போரும் உண்டு. ஒற்றை இறையாகிய பிரும்மம் என்பதை வேதம் உயர்த்திப் பிடிக்கின்ற போதிலும், இறையம்சமான இயற்கையின் பல்வேறு ஆற்றல்களைத் தனித்தனி தெய்வங்களாகவும் உருவகப்படுத்துகிறது.

நமது முன்னோர், இந்த உருவகத் தெய்வங்களை உருவப்படுத்தி, தங்களது விருப்பத்துக்கேற்ப வழிபடு தெய்வங்களாக வரித்துக் கொண்டனர். தங்களது வழிபடு தெய்வத்தையே அந்த ஆதி பரம்பொருளாகக் கருதினர். ஆயினும் ஒற்றை உண்மையைத்தான் (ஏகம் ஸத்) நாம் பல பெயர்களை இட்டு அழைக்கிறோம் என்பது முன்னோர்களுக்கு நன்கு புரிந்திருந்தது. ஆகையால் சண்டையில்லாத சமரசம் சாதாரணமாகத் தழைத்தது.

இயற்கையின் முக்கியச் செயல்களான படைத்தல், காத்தல், அழித்து மறுஉருவாக்குதல் ஆகியவற்றைத் தனித்தனித் தெய்வங்களாக பிரும்மா, விஷ்ணு, ருத்ரன் (சிவன்) என தரிசித்தனர். வேதங்களின் அடிப்படையில் கூறப்படும் இந்தத் தெய்வங்கள், நம் பழந்தமிழகத்திலும் ஏன் இப்போதும் கூட மாற்றுப் பெயர்களில் உண்டு. அந்தத் தெய்வங்கள்தாம், கருப்ப சாமி (விஷ்ணு), முனீஸ்வரன் (ருத்ரன்), ஐயனார் (பிரும்மா).

பழந்தமிழில் கரிய மேனி, கருநீல நிற மேனி கொண்டவனாக வர்ணிக்கப்படும் மாயோன்தான் வேதத்தில் விஷ்ணு, நமது நாட்டுப்புறங்களில் அவரே கருப்பசாமி. எப்போதும் தவத்தில் திளைத்திருப்பதுடன் கோப ஆவேசம் கொண்டவனாகவும் வேதத்தில் வர்ணிக்கப்படும் ருத்ரன்தான் முனீஸ்வரன். தூய தமிழில் முனி என்பதற்கு தவவலிமை என்பதோடு கோபம் என்ற மற்றொரு பொருளும் உள்ளதை ஒப்புநோக்கவும்.

பழந்தமிழில் பிரும்மாவைக் குறிப்பதற்கு அயன், ஐயன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐ என்ற சொல்லுக்கு தலைவன், தலைமைப் பண்பு உள்ளவன் என்று பொருள். உலகில் படைப்புத் தொழிலுக்குத் தலைமை தாங்குவதால் பிரும்மா, ஐயன் எனப்பட்டான். அவ்வகையில், நமது நாட்டுப்புறத் தெய்வமான ஐயனார், பிரும்மாதான். அவர் அன்பானவர், அசைவம் ஏற்பதில்லை. கருப்பசாமி, முனீஸ்வரனுக்கு ஆடு, கோழி அறுத்துப் படையலிட்டாலும் ஐயனாருக்கு அசைவப்படையல் படைக்கப்படுவதில்லை என்பதை கவனிக்கவும்.படைப்புத் தொழிலுக்கு அறிவாற்றல் அதிகம் வேண்டும்.

இதன் அடிப்படையில், அறிவாற்றல் மிகுந்தோரும், பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மையாகிய பிரும்மத்தை அறிவதில் நாட்டம் கொண்டோரும் ஆதி காலத்தில் பிராமணர் என அழைக்கப்பட்டனர். பிராமணர்களுக்குத் தமிழிலே அந்தணர் எனப் பெயர் உண்டு. பிரும்மாவை ஆதி அந்தணன் என்றே சங்கத் தமிழ் செப்புகிறது. கடுவன் இளவெயினனார் பாடிய பரிபாடலில் (எண் 5), “ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ, வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆதி அந்தணனாகிய பிரும்மா, வையகம் எனப்படும் இந்த பூமியாகிய தேரைத் செலுத்துவதற்கான வழிவகைகளை நன்கு அறிந்துகொண்டு, வேதமாகிய குதிரையைப் பூட்டி அந்தத் தேரை இயக்குகிறான் என்று இதற்குப் பொருள்.நாம் வாழும் பூமியானது, அடிப்படையில் ஓர் நீர்க்கோள். அந்த நீரில் மூன்றில் ஒரு பகுதியாக நிலப்பகுதி விளங்குகிறது. நீரில் இருந்துதான் காலப்போக்கில் நிலம் தோன்றியுள்ளது. பல படைப்புகள் நிகழும் நிலத்தை அந்த நீர்தான் தாங்கிப் பிடித்துள்ளது. இதனைத்தான் நமது ஹிந்து மத புராணங்கள், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து (தாமரை போன்ற தொப்புள் கொடியில் இருந்து) படைப்புக் கடவுளான பிரும்மா தோன்றினார் என கவித்துவமாகக் கூறுகின்றன.

இந்தப் புராணச் சம்பவத்தை நமது பழந்தமிழும் பாங்குடன் எடுத்துரைக்கிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படையில். “நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின்” என இது வர்ணிக்கப்படுகிறது. நீல நிறமும் நெடிய உருவமும் கொண்ட திருமாலின் கொப்பூழ் (தொப்புள்) நான்முகம் கொண்ட பிரும்மனைப் படைத்தளித்த பல இதழ்களைக் கொண்ட தாமரைப் பூவாகும் என்று இதற்குப் பொருள். நமது புவியின் நீர்ப்பரப்பு, பரந்து விரிந்தது என்பதோடு நீல நிறம் கொண்டது. சம்ஸ்கிருதத்தில், விஷ்ணு என்பதற்கு எங்கும் பரவியிருப்பவர் என்ற பொருள் உண்டு பூமியின் நிலப்பகுதியானது பல அடுக்குகளைக் கொண்டது. அதுதான் பல் இதழ் தாமரையாக வர்ணிக்கப்படுகிறது. நான்கு திசைகளைக் குறிக்கும் வகையில் பிரும்மாவுக்கு நான்கு முகங்கள் எனக் கூறப்படுகிறது.

திருமாலின் தொப்புள் தாமரையில் பிரும்மா தோன்றினார் என்ற கருத்து, கடுவன் இளவெயினனார் பாடிய பரி பாடலிலும் (எண் 3) எடுத்தாளப்பட்டுள்ளது. ‘‘வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும் நீ” என்று திருமாலை இளவெயினனார் போற்றுகிறார். வாய்மொழி ஓடை என்பது வேதத்தைக் குறிக்கிறது. வேதத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளபடி, தாமரைப்பூவினுள் பிறந்தோனாகிய பிரும்மனும், அவனது தந்தையான விஷ்ணுவாகவும் இருப்பவன் நீயே என்று திருமால் புகழ்ந்துரைக்கப்படுகிறார். சிவனும் அவரது நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகனும் ஒன்றே என்று கூறப்படும் கருத்துக்கு ஒப்ப, இங்கே திருமாலும் அவரது தொப்புளில் இருந்து தோன்றிய பிரும்மனும் ஒன்றே என்று கூறப்பட்டுள்ளது.

மதுரை மாநகரின் சிறப்பை எடுத்துக்கூறும் பரிபாடல் புறத்திரட்டின் எட்டாம் பாடலும் பிரும்மனை, தாமரைப்பூவில் தோன்றியவன் என்று குறிப்பிடுகிறது. “பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரலெடுப்ப ஏமஇன் துயில் எழிதல்” என்பன அப்பாடல் வரிகள். திருமாலின் தொப்புள் தாமரைப் பூவிலே பிறந்தவனான பிரும்மனின் நாவில் இருந்து தோன்றிய நான்கு வேதங்களை நன்கு பாடுகின்ற குரலைக் கேட்டு விடியற் காலையில் மதுரை மாநகரம் துயில் எழுகிறது என்று இதற்குப் பொருள்.

நமது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பிரும்மன், ஐயனார் என்ற பெயரில் மட்டுமின்றி சாத்தனார், சாத்தன் என்ற பெயரிலும் நாட்டுப்புறங்களில் வணங்கப்படுகிறார். இப்பெயர்தான் சம்ஸ்கிருதத்தில் சாஸ்தா எனப்படுகிறது. புராணக்கதையின்படி சாஸ்தா, சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர். இதுவும் தத்துவத்தை விளக்கும் உருவகக்கதைதான். நீர்க்கோளமான இப்பூமண்டலம், ஊழிக்காலத்தே (பிரளயத்தின்போது) பேரண்டத்தில் நெருப்புக்கோளம் ஒன்று ஆற்றல் விசையால் வெடித்துச் சிதறியதன் துண்டம் ஆகும். அந்த ஆற்றலே சக்தி. அந்தப் பெருந்தீக்கோளம்தான் சிவன். அது குளிர்ந்து உருவான நீர்க்கோளமே விஷ்ணு. அதில் இருந்து தோன்றிய படைப்புக்களமான பூமியே பிரும்மா, அவரே சாஸ்தா. அந்த வகையில் சாஸ்தா, ஹரி ஹர புத்திரர்.அடுத்ததாக, ஆரியக் கடவுள் எனப்படும் இந்திரன், தமிழர்களின் மருதத் திணைக் கடவுள் ஆனது எவ்வகையில் என்பதைக் காண்போம்.

– தொடரும்