சங்கத் தமிழ் போற்றும் வேதம்!
பழந்தமிழர்களுக்கும் வேதத்துக்கும் தொடர்பே இல்லை, அது பிற்காலத்தில் ஆரியர்களால் தமிழர்கள் மீது புகுத்தப்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களில் இருந்து ஓர் ஆதாரம் கூட காட்ட முடியாது. அதேநேரத்தில் வேதம் என்பது பண்டைத் தமிழர் நாகரீகத்தோடு இரண்டறக் கலந்தது என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
வேதங்களில் முதன்மையானதும் மிகப் பழமையானதுமான ரிக் வேதத்தில் பழந்தமிழ்ச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. பாரதத்தின் தென்பகுதியைச் சூழ்ந்திருக்கும் கடல் பற்றிய குறிப்புகளும் உள்ளன. வரலாற்றின் தொடக்கத்தில் பண்டைத் தமிழும், ஆதி சம்ஸ்கிருதமும் ஒன்றாய் இணைந்திருந்தபோது அல்லது ஒரே மூல மொழியில் இருந்து ஆதி சம்ஸ்கிருதம் கிளை விடத்
தொடங்கியபோது ரிக் வேதம் இயற்றப்பட்டிருக்கலாம் என மொழியியல் அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள். சம்ஸ்கிருதம் தனித்து வளர்ந்த பிறகு யஜூர், சாமம், அதர்வணம் போன்ற இதர வேதங்களும் இதிகாச புராணங்களும் தோன்றியிருக்கலாம். இதனைத்தான் மகாகவி பாரதியார் கூட, ரிக் வேத சம்ஸ் கிருதமும் இதர வேத, இதிகாசங்களின் சம்ஸ்கிருதமும் வேறு பட்டிருப்பதை ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வேதம் அன்னியர்களால் புகுத்தப்பட்டது என்றால், இக்காலத்தில் தவறான கருத்து உருவாக்கங்களால் எழுந்திடும் எதிர்ப்புகள், கொந்தளிப்புகள் அக்காலத்திலேயே ஏற்பட்டிருக்க வேண்டுமே! அவற்றுக்கான ஆதாரம் என்ன, சிறு குறிப்பு கூட சங்கத் தமிழ் இலக்கியங்களில் இல்லையே! அக்காலத் தமிழர்கள் என்ன, அவ்வளவு தொடைநடுங்கிகளா? மாறாக, வேதத்தை ‘கேள்வி’, ‘எழுதாக்கிளவி’ ‘வாய்மொழி ஓடை’ என்று பெருமையோடு வாழ்த்தும் வாசகங்கள்தானே இடம்பெற்றுள்ளன!
பல நூற்றாண்டுக் காலமாக, ஓலையிலோ கற்களிலோ இதர சாதனங்களிலோ எழுதப்படாமல், காதால் கேட்டு மனனம் செய்து வாயால் ஓதியே வளர்ந்ததால் வேதத்துக்கு ஸ்ருதி என்ற பெயர் உண்டு. இதனைத்தான் சங்க இலக்கியங்களின் தூய தமிழானது ‘கேள்வி’ என்கிறது. இதேபொருளில்தான் எழுதாக்கிளவி, அதாவது எழுதப்படாத சொற்கள் என்ற பெயரும் நம் தமிழில் அமைந்தது.
சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலின் முதல் பாடலில், நாவல் அந்தணர் அருமறைப் பொருள் என்று திருமால் போற்றப்படுகிறார். அருமை வாய்ந்தது என்பதாலும் பகுத்துப் பார்த்து மெய்ஞானத்தால் உணர்ந்து கொள்ளக்கூடிய விஷயத்தை நுட்பமாகவும், ரகசியமாகவும் அதாவது மறைவாகவும் கூறுகிறது என்பதாலும் வேதத்தை “அருமறை” என்று பழந்தமிழ் பாராட்டுகிறது. நாவல் என்பது நாவலந்தீவாகிய பாரதத்தைக் குறிக்கிறது.
தற்போது தீபகற்பமாக இருக்கின்ற இந்தியா, ஒரு காலத்தில் நாவல் பழம் போன்ற வடிவில் தீவுப் பகுதியாக பெருங்கடலிலே மிதந்து கொண்டிருந்தது; பின்னர் கண்ட நகர்வுக் கொள்கையின் படி, வடக்கே இருந்த நிலப்பகுதியோடு மோதி ஒன்றிணைந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் நம் பாரதத்துக்கு நாவலந்தீவு (ஜம்புத்வீபம்) என்ற பழம்பெயர் உண்டு. இவ்வாறாக நிலப்பகுதிகள் மோதி இணைந்த பிறகும், பின்னர் தென்னகத்திலே இரு பெரும் கடற்கோள்கள் (அக்கால சுனாமிகள்) தோன்றிய பிறகும் தெற்கே வாழ்ந்த பெரும்பாலானோர் வடக்கே இடம் பெயர்ந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. முதலில் சிந்துச் சமவெளி வரையிலும் பின்னர் அதனையும் தாண்டி ஈரான், ஈராக் வரையிலும் அவர்கள் பரவியிருக்கலாம். காலச் சுழற்சியில் அவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் தங்களது தாயகத்துக்குத் திரும்பியிருக்கலாம்.
அந்தணர் (பிராமணர்) என்பது பிற்காலத்தில் குறிப்பிட்ட சாதயினரைக் குறிக்கும் சொல்லாக மாறினாலும், தொடக்கத்தில் அது கற்றறிந்தோர், மெய்ஞானிகள், முனிவர், துறவிகள் ஆகியோரைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவே இருந்தது. ஏனெனில் பாரதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் சப்தரிஷிகள் (ஏழு முனிவர்கள்) வழிவந்தவர்களே. எழுத்து தோன்றாத காலத்திலே வேதத்தைக் காப்பாற்றுவதே தங்களது கடமை என வரித்துக் கொண்டோரின் சந்ததியினர், பிற்காலத்தில் தனியொரு சாதியாக உருப்பெற்றிருக்கலாம். நிற்க. நாவல் அந்தணர் அருமறைப்பொருள் என்ற சொல் மூலம், பாரதத்தின் அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் உட்பொருளாக இருப்பவர் திருமால் என்று புகழப்படுகிறார்.
திருமால் மட்டுமல்ல, செவ்வேள் எனப்படும் முருகப்பெருமானும் வேதத்தின் கருப்பொருளாகத் திகழ்பவன் என்பதை பரிபாடல் எடுத்துரைக்கிறது. புலவர் கேசவனார் இயற்றிய பரிபாடலின் 14-ஆவது பாடலில், ‘இருபிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே’ என்று முருகன் போற்றப்படுகிறார். அந்தணர்கள் ஓதுகின்ற வேதத்தின் அடிப்படையிலான அறச்செயல்களில் நடுநாயகமாக வீற்றிருப்பவன் முருகப் பெருமான் என்று இதற்குப் பொருள்.இதிலே முக்கியமாகப் பகுத்து காண வேண்டியது, “இருபிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து ஒருபெயர் அந்தணர்” என்ற சொல்லாக்கம். இரு முறை பிறப்பும் (துவிஜர்), கருணையுள்ளமும் கொண்டவர் அந்தணர் என்பது இதற்குப் பொருள். அதாவது இயற்கையாய் பிறக்கும்போது ஒரு முறையும், பூணூல் அணிவித்து உபநயனம் செய்விக்கப்படும்போது மறு முறையும் என இரு பிறப்பு கொண்டவர்கள் அந்தணர்கள் என்பதை இது எடுத்துரைக்கிறது. முற்காலத்தில் பிறப்பின் அடிப்படையில் அன்றி, சிறப்பின் அடிப்படையிலேயே பிராமணன் உருவானான் என்பதற்கு இதுவே சான்று.
வேதமானது சிவபெருமானால் உரைக்கப்பட்ட பெருமையையும், ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு கிளைகளையும், ஆறு அங்கங்களையும் கொண்ட மிகப் பழமையான நூல் என்பதை புறநானூற்றில் (பாடல் எண் 166) புலவர் ஆவூர் மூலங்கிழார் அருமையாக எடுத்துரைக்கிறார். “நன்று ஆய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன்வாய் போகாது ஒன்று புரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முது நூல்” என்கிறார். தவ முனிவர்களால் நன்கு ஆராய்ந்து அறியப்பட்ட நீளமான சடைமுடியினைக் கொண்ட உலகின் முதல்வனும் மிக மூத்தோனும் ஆகிய சிவபெருமானின் வாக்கில் இருந்து பிசகாத அறம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டதும், நான்கு கிளைகளையும் ஆறு உட்பிரிவுகளையும் கொண்டதுமான மிகப் பழமையானநூல் வேதம் என்கிறார் மூலங்கிழார்.அந்தணர்களின் ஆறு கடமைகள் என்று வேதம் கூறுவதை பதிற்றுப்பத்து பாடலில் மிக அழகாக எடுத்துரைக்கிறார் புலவர் பாலைக் கௌதமனார்.
ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறுபுரிந்து ஒழுகும் அறம்புரி அந்தணர் (பாடல் 24) என்கிறார். அதாவது வேதம் ஓதுதல், வேள்வி செய்தல், வேதத்தை பிறருக்குச் சொல்லிக் கொடுத்து ஓதச் செய்தல், வேள்விகளை பிறருக்காக அல்லதுபிறரைக் கொண்டு நடத்துதல், தானங்களை வழங்குதல், அரசர்கள் மற்றும் செல்வந்தர்களிடமிருந்து அறச் செயல்களுக்காக தானங்களை தாம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய ஆறு கடமைகள், அறச் செயல்களைச் செய்கின்ற அந்தணர்களுக்கு உண்டு என்கிறார். வேதம் ஓதுவதையும், அதன் அடிப்படையிலான வேள்விச் சடங்குகளையும் சங்க இலக்கியங்கள் உயர்த்தியே பிடித்துள்ளன. இதற்கான மற்ற ஆதாரங்களை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
பத்மன்
-தொடரும்