இருசக்கர வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவில் மேலும், ‘விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம். இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டுக் கருவியையும் பொருத்த வேண்டும். இறக்குமதி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். இது குறித்து இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்ற உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளி பாடங்களிலும் சாலை விதிகளை பற்றி மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குவது எப்படி என கற்றுக்கொடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.