சத்தீஷ்கர் மாநிலத்தின் சுர்குஜா நகரில் அம்பிகாப்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு பொது கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், “பாரதத்தில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே. பாரதத்தை யாரொருவர் தாய்நாடாக நினைக்கின்றாரோ அவர் ஓர் ஹிந்துதான். எந்தவொரு மதத்தினை பின்பற்றுபவராகவும், என்ன உடை அணிபவராகவும் இருந்தபோதும் கலாசாரம், மொழி, உணவுப் பழக்கம், சித்தாந்தம் எதுவாக இருந்தாலும் அவர் ஓர் ஹிந்துவே. பாரதத்தை மதத்திற்கு அப்பாற்பட்டு தாய்நாடாக நினைக்கும் அனைவரும் ஹிந்துக்களே. இதுவே உண்மை. இந்த உண்மையையே சங்கம் உரக்க பேசி வருகிறது. 1925ம் ஆண்டில் இருந்து நாங்கள் இதனை சொல்லி வருகிறோம். ஏனெனில் பல நூற்றாண்டுகளாக நாம் ஒன்றுபட்டு உள்ளோம். ஒவ்வொருவரும் அவரவர் நம்பிக்கை, சடங்குகளை கடைபிடிக்க வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கையை மாற்ற முயலக் கூடாது. ஹிந்துத்துவா சித்தாந்தம் பன்முகத்தன்மையை ஆதரிக்கிறது. மக்களிடையே வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும் என்று நம்புகிறது. அனைத்து பாரத மக்களின் டி.என்.ஏவும் ஒன்றுதான். பன்முகத்தன்மை இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுதான். நமது கலாச்சாரம் நம்மை இணைக்கிறது. நாம் நமக்குள் சண்டையிட்டுக்கொண்டாலும் நெருக்கடிக் காலங்களில் ஒன்றுபடுவோம். கொரோனா வைரஸ் தொற்று நோயை ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து போராடியது. சங்கம் பற்றி புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சங்கத்தில் இணைவதே சிறந்த வழி. சங்கத்தின் கிளைக்கு வந்த பின்னரே சங்கம் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள முடியும். சங்கத்தின் கிளைக்கு வருவதற்கு எந்த கட்டணமும் இல்லை. இனிப்பை அதனை சுவைத்த பின்னரே அறிய முடியும். வான்வெளியை போன்று சங்கமும் ஒப்பிட முடியாதது. வாசிப்பது மற்றும் எழுத்தின் வழியே சங்கத்தின் அர்த்தம் பற்றி யூகிக்க முடியாது. ஒருபுறம் வேற்றுமை பற்றிய விவாதம் போய் கொண்டிருக்கிறது. ஆனால், ஒவ்வொருவரும் தொடர்ந்து ஒன்றாகவே உள்ளோம். ஒவ்வொருவரும், பல ஆண் மற்றும் பெண் கடவுள்களை கொண்டிருக்கிறோம். கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் தேசத்தில் உள்ளனர். வேத காலத்தில் இருந்து, இது இருந்து வருகிறது. குறுகிய மனம் படைத்த மக்கள் அவர்களுக்குள் மோதி கொள்கின்றனர். பாரதத்தில் ஒரேயொரு தெய்வ வழிபாடோ, ஒரே மொழியோ இல்லை. இங்கு பல ஜாதிகள் உள்ளன. இருந்தபோதும் பாரதம் ஒன்றாகவே உள்ளது. அரசர்கள் மாறி மாறி வரலாம். ஆனால், பாரதம் எப்போதும் ஒரேமாதிரியாகவே உள்ளது” என கூறினார்.