நாட்டை நிர்வகிக்க நல்ல ஆட்சி, அதன் சார்பாக நல்ல வேட்பாளர், இவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யும் நல்ல வாக்காளர்கள் இவர்கள்தான் தேவை. இவர்களை எப்படி நாம் கண்டறிவது? இந்த சிந்தனையை இங்கு எந்தத் திராவிடக் கட்சிகளும் கொடுக்கவில்லை. ஆனால், இதைப்பற்றி 50 ஆண்டுகளுக்கும் முன்னால் ஓர் அரசியல் தலைவர் சிந்தித்துள்ளார். ஆம், அவர் தமிழகம் சரியாகத் தெரிந்துகொள்ளாத ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய அரசியல் ஞானி. பாரதிய ஜனசங்கத் தலைவராக இருந்த பண்டிட் தீன்தயாள் உபாத்யாய். அவரின் பார்வையிலே…
ஓர் அரசியல் கட்சி என்பது ஏதோ தனிநபர்களைக் கொண்ட கூட்டமல்ல. மாறாக உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு அதனை செயல்படுத்தலே. ஆட்சி, அதிகாரம் என செயல்படும் செயல்பாட்டு அமைப்பே ஒரு நல்ல ஆட்சி. தேசத்தின்மீது பக்தியும், அதன் காரணமாக அர்ப்பணிப்பும் அதன்காரணமாக ஒழுக்கமும் கொண்ட தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பே நல்ல அரசியல் கட்சி. நல்ல அரசியல் கட்சியின் இலக்கு ஆட்சியைப் பிடிப்பதோடு முடிவதில்லை. மக்கள் சேவை செய்வதற்கு அரசியல் – ஆட்சி ஒரு வழிமுறை, அவ்வளவே. ஆனால், நிதர்சனம் என்ன? பெருங் கொள்ளை போல சம்பாதிப்பதே பிரதானமாக உள்ளது! இந்நிலைக்கு சமுதாயத்தைக் கொண்டு சென்றுள்ள நடைமுறைக்கு நாம் வெட்கப்படவேண்டும். லஞ்சம் – ஊழல் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அநியாயமாகப் போய்விட்டது. வாக்காளர்கள் மனது வைத்தால் மட்டுமே இதை சரிசெய்ய இயலும். அதற்கு என்ன செய்யவேண்டும்?
நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். நல்ல கட்சியால் மட்டுமே நல்ல வேட்பாளர்களைத் தரமுடியும். ஜாதியின் பெயராலோ, மதத்தின் அடிப்படை யிலோ, பணபலத்தாலோ வேட்பாளர்களை முடிவுசெய்யக்கூடாது. அப்படியானால் ‘நல்ல வேட்பாளர் யார்? நல்ல வேட்பாளர் என்பவர் இப்படித்தான் இருப்பார் என வரையறுத்துச் செய்வதைவிட புரிந்துகொள்ளுதல் நலம். இருப்பினும் நல்ல வேட்பாளர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் பிரதிபலிப்பவராக இருக்கவேண்டும். தனது தொகுதியை நன்கு சீரமைத்து வளர்த்தெ டுக்கும் பண்புள்ளவராக இருக்கவேண்டும்.
மக்களின் உண்மைகளைப் பிரதிபலிப்பவராக, குரல் கொடுப்பவராக இருக்கவேண்டும். தனிப்பட்ட வகையிலே மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவராகவும், ஆட்சியின் கொள்கைகளை பிரதிபலிப்பவராகவும் சுய ஒழுக்கம் கொண்டவராகவும் இருக்கவேண்டும். நிச்சயமாக நல்ல கொள்கைகளை உடைய கட்சிகள் நல்ல வேட்பாளர்களைத் தரமுடியும். மாறாக ஜாதிபலம், பணபலம், மதரீதியான பலம் கொண்டவர்கள் என்ற ரீதியில் வேட்பாளர்களைத் தேர்வு செய்தால் நலம் விளைவது கடினமே.
நாம் காலங்காலமாக இவர்களுக்குத்தான் ஓட்டுப்போட்டோம், அந்தக் கட்சிக்குத்தான் 3 தலைமுறையாக வாக்களித்தோம் எனப் பொத்தம் பொதுவாக இருக்கக்கூடாது. இந்த மனநிலை மாறவேண்டும். அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டுமெனில், நமது நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரப் பண்பாட்டு நடைமுறை தொடர்ந்து இருக்கவேண்டும் எனில், நல்ல கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும்.
சிறுபான்மை என்னும் தாஜா போக்கும் இங்கு காணப்படுகிறது. இது ஆரோக்கியமானது அல்ல. சிறுபான்மை மக்களின் நலம், வளர்ச்சி, பாதுகாப்பு அனைத்தும் பெரும்பான்மை மக்களின் அரவணைப்பிலும் பெருந்தன்மையிலும்தான் உள்ளது. ‘‘நாழிக்குள்ளே தான் ஒழுக்கு’’ என்னும் பழமொழி உண்டு. எனவே, சிறுபான்மை, பெரும்பான்மை பேதமை தவிர்த்து, ஒருபான்மையாக இருப்பது நல்லது. வாக்களிக்கும்போதும் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்பதை வாக்காளர்களின் சமூக ஒழுக்காகக் கடைப்பிடிக் கப்பட வேண்டும். வாக்காளர் கட்டளையிடுபவராக இருக்கவேண்டும். முறையிடுபவராக இருக்கக்கூடாது. வாக்காளர்களின் குரல் தாழ்ந்துபோய் இருக்கக் கூடாது. உறுதியாக இருக்கவேண்டும். உயரிய கொள்கைக்காக வாக்களிக்க வேண்டும். கட்சிக்காக அல்ல. நல்ல கட்சிக்காக வாக்களிக்க வேண்டும். தனி ஒருவருக்காக அல்ல. நல்ல மனிதருக்காக வாக்களிக்க வேண்டும். அவர்தரும் இலவசங் களுக்காக அல்ல.
வாக்கு நமது உணர்வுகளோடு சம்பந்தப் பட்டது. அதை வீணாக்குவதோ விற்பதோ கூடாது. வாக்களிப்பது நமது சுதந்திரம் – சுதந்திரமாக வாக்களியுங்கள். வாக்களிப்பபது என்பது சமுதாயத்தில் செயல்படுத்தவேண்டிய நமது உரிமை. அரசியல் கட்சிகள் மக்களுக்காக மக்களின் பலத்தால் கட்டமைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளைக் கட்டமைக்கும் மக்களே, அதன்மூலம் அரசியல் அபிலாஷைகளை இலக்குவாக அடையமுடியும். சின்னஞ்சிறு ஆதாயங்களுக்காக நமது ஜனநாயக உரிமையை இழந்துவிடக்கூடாது.
நடைபெறும் தேர்தலில் மக்கள் வெற்றிபெற வேண்டும். வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதைவிட வெற்றிபெற வேண்டிய கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். கண்டிப்பாக வாக்களிக்கவேண்டும். அது நமது ஜனநாயகக் கடமை. உயர்ந்த கொள்கை, தேசபக்தி, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் கொண்ட கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். பணபலத்திலும் படைபலத்திலும் பொய்யான வாக்குறுதிகளாலும் ஊழல் செயல் பாட்டாலும் கட்டமைக்கப்பட்ட கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் சந்திக் கின்ற இத்தேர்வில் மக்கள் வெற்றி பெறட்டும். தேசபக்தியின் அடிப்படையில் உயர்வான லட்சியங்களால் கட்டமைக்கப்பட்ட உன்னத மான கட்சி வெற்றியால் மலரவேண்டும்.
(பண்டிட் தீன்தயாள் உபாத்யாய பாரதிய ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க) பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் இருந்தவர்).