சொத்துக்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பது போல, இனி வாகனங்களுக்கும் வாரிசுதாரரை நியமிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் வாகன உரிமையாளர் மரணமடைந்தால் ஏற்படும் குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில் 1989ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, உரிமையாளர் புதிய வாகனத்தை பதிவு செய்யும்போது அல்லது பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாரிசுதாரரை நியமிக்க முடியும். வாகனத்தை விற்கும்போது வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து தருவதற்கும் வாரிசுதார் முழு அதிகாரம் பெற முடியும். எனினும், விவகாரத்து, பாகப்பிரிவினை செய்யும்போது, குறிப்பிட்ட நடைமுறை மூலமாக வாரிசுதாரரை மாற்றுவதற்கான வாய்ப்பும் வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும்.