மும்பையைச் சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றார். இவர் மீது, வங்கி கடன் மோசடி, பணப்பரிமாற்ற மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், சி.பி.ஐ, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில், 2019ல் நிரவ் மோடியை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. அங்கு, வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்ட நிரவ் மோடியை பாரதத்திற்கு நாடு கடத்த, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், அவரை நாடு கடத்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, நிரவ் மோடியை பாரதத்திற்கு நாடு கடத்த பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரீத்தி படேல் ஒப்புதல் அளித்தார். விரைவில் நிரவ் மோடி கைது செய்யப்பட்டு பாரதத்திற்கு அழைத்துவரப்படுவார். இதேபோல, விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கிலும் பாரதத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்து, விரைவில் அவரும் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கலாம்.