இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளில், ஆராய்ச்சி, தயாரிப்பு, வளர்ச்சியை மேற்கொள்ள ரூர்கேலா தேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘விண்வெளி தொழில்நுட்ப அடைகாப்பு மையம்’ (எஸ்-டி.ஐ.சி) நிறுவ உள்ளது. இந்த மையம் எதிர்கால விண்வெளி பயணங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்களை உருவாக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வழி நடத்தவும் ஊக்குவிக்கவும் உதவும். இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோவின் தலைவரும் விண்வெளித்துறைச் செயலாளருமான டாக்டர் கே. சிவன், ‘விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகளின் களத்தில் ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப இது உதவும்’ என தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ‘யுக்தி – சஞ்சிதா 2021’ என்ற திட்ட புத்தகமும் வெளியிடப்பட்டது.