ஆமாம்! நாங்க தமிழ்ச் சங்கி தான்!

புதிய தொடர் – 1

பத்மன்

தமிழர்களாகிய நம்மிடம் உள்ள அறிவை, சமூக வலைதளங்களில் விவாதங்களிலும் பரப்பினால் ‘சங்கி’ என்று அழைத்துவிடுகின்றனர். நமது பண்பாட்டையும் பெருமிதத்தையும் பேசினால் ஏளனம் பேசும் அவல நிலை காணப்படுகிறது. பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு கும்பல் நமது அறிவை சுத்தமாகத் துடைத்தெறிய முனைந்ததால் சுருதிகள் (வேதங்கள்) சொல்வது மட்டுமல்ல, சங்கத் தமிழ் சொல்வதும் பலரது செவிகளில் விழுவதில்லை. அப்படியே விழுந்தாலும் பொருள் புரிவதில்லை. இந்த அறியாமைதான் தமிழரின் அழிவுக்கான விதையாய் முளைத்து, வேகமாய் வளர்ந்து வருகிறது. இந்த அறியாமையால்தான் தமிழர்கள் என்றால் ஹிந்துக்கள் இல்லை என்ற அவச்சொல்லை, பழிச்சொல்லை, படுபாதகச் சொல்லை – செவிகள் இருந்தும் செவிடர்களாய் சகித்துக்கொண்டிருக்கிறோம். பண்டைக்காலத்தில் மதுரையில் சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட பழந்தமிழின் இலக்கியங்கள், 1925-இல் நாகபுரியில் தோன்றிய சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தற்போது வளர்த்திடும் அதே ஹிந்து உணர்வைத்தான் போற்றுகின்றன என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டாமா? மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பத்மன் எழுதும் இந்தக் கட்டுரை தொடரைப் படியுங்கள்! பரப்புங்கள்!

சமூக வலைதளங்களில் வசைபாடும் திராவிட, தனித்தமிழ் இயக்கத்தினர்களால் இந்த வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது – அதுதான் ‘சங்கி’. தேசப்பற்றுடனும், பாரதத்தின் ஆணிவேரான ஹிந்து மத கலாசாரப் பற்றுடனும் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் பதிவிடுவோருக்கு அவர்கள் சூட்டுகின்ற பட்டப்பெயர் இது. சங்கி என்றால் பத்தாம்பசலித்தனமானவன், தமிழர் நாகரீகத்துக்கு விரோதமானவன் என்ற நினைப்பில் அவர்களுக்கே உரிய பகுத்தறிந்து பாராத புகுத்தறிவுத்தன்மையால் அவர்கள் பரிகாசத்துக்காகப் பயன்படுத்துகின்ற சொல்லாகிப் போனது இது. ஆனால் பரிதாபத்துக்குரியவர்கள் அக்கூட்டத்தார்தான்! ஏனென்றால் ஆதித் தமிழர்களே சங்கிகள்தானே!

ஆம்! சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் அல்லவோ நம் முன்னோர்கள்! அதனால் மட்டுமல்ல, இன்று பெயரளவில் தமிழராய், தமிழறியாமல் வாழுகின்ற இக்கூட்டத்தார் எந்தப் பொருளில் ‘சங்கி’ என்று பழிக்கிறார்களோ அந்த உட்பொருளுக்கு உகந்த இலக்கணமாய் வாழ்ந்தவர்களாயிற்றே நம் சங்க காலத் தமிழ் முன்னோர்கள். ஆகையால் தமிழ் ஹிந்துக்களாகிய நாம் துணிந்து சொல்வோம் – “ஆமாம், நாங்க தமிழ்ச் சங்கிதான்!”

இதற்கு என்ன ஆதாரம்? வாருங்கள் சங்கத் தமிழ் இலக்கியங்களை ஆராய்வோம், பகுத்தறிவோம்! இந்தியாவில் மற்றவர்கள் எல்லாம் சாமி கும்பிடும் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்திருந்த வேளையில் தமிழன் மட்டும்தான் கடவுளை வணங்காத நயத்தகு நாகரீகம் மிகுந்தவனாக வாழ்ந்தான் என்பது தற்கால திராவிடர்களின் அண்டப்புளுகுகளில் ஒன்று. ஆனால், பொதுவான பெருந்தெய்வம் தவிர, திணைக்கொரு தனித்தெய்வம் வைத்து வணங்கிய தனித்துவம் வாய்ந்தவன் ஆதித் தமிழன்! இதனை நற்றமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் நன்றாகவே எடுத்துரைத்துள்ளது:

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன்
மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே”

தொல்காப்பியத்தின் அகத்திணையியலில் இந்தப் பாடல் உள்ளது. இதன் பொருள் மாயோன் எனப்படும் திருமால் முல்லை (காடு) நிலத்துக்கும், சேயோன் எனப்படும் முருகன் குறிஞ்சி (மலை) நிலத்துக்கும், வேந்தன் எனப்படும் இந்திரன் மருத (வயல்) நிலத்துக்கும், வருணன் நெய்தல் (கடற்கரை) நிலத்துக்கும் தெய்வங்கள். இதுபோக வறண்ட நிலமாகிய பாலைக்கு கொற்றவை தெய்வம்.இதைக் கூறியவுடன், கடவுளை மறுக்கின்ற நமது பகுத்தறிவுப் பகலவர்கள் கூறுகின்ற மறுப்பு என்ன தெரியுமா? “தொல்காப்பியத்தில் கூறப்படுகின்ற மாயோன் வேறு, ஆரியர்கள் குறிப்பிடுகின்ற விஷ்ணு வேறு. இதேபோல் சேயோன் வேறு, ஆரியர்களின் சுப்ரமண்யன் வேறு, வேந்தன் வேறு இந்திரன் வேறு, தமிழர்களின் வருணனும் ஆரியர்களின் வருணனும் வெவ்வேறு, கொற்றவை வேறு, சக்தி வேறு” என்பதுதான். முதலில் சாமி இல்லை என்றவர்கள், பிறகு வெவ்வேறு சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

அத்துடன், மிகக் கடுமையான பகுத்தறிவுவாதிகள் (இவர்களது பின்புலத்தை நாம் பகுத்தறிந்து பார்த்தால் அவர்களில் பெரும்பாலோர் அயல்நாட்டுக் கடவுளை வணங்கும் அரைகுறைத் தமிழர்களாக இருப்பர்) தமிழர்களின் கடவுளர்களுக்கும் சுமேரியக் கடவுளர்களுக்கும் முடிச்சுப் போடுவர். அதே மூச்சில் இவர்களின் கருத்துப்படியான ஆரியக் கடவுளர்களுக்கும் பாரசீகக் கடவுளர்களுக்கும் முடிச்சுப் போடுவர்.எந்த வகையிலும் வேதங்களில் குறிப்பிடப்படும் கடவுளர்களுக்கும், பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடவுளர்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்று கடுமையாக வாதிடுவார்கள்.

இவர்கள் வாதப்படி, தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் தொடர்பு இல்லவே இல்லையாம். வட இந்தியர்களுக்கு அவர்களுக்கு வடமேற்கே உள்ள பாரசீகம் அதாவது இன்றைய ஈரானோடு மட்டுமே தொடர்பாம். அதைவிடக் கூத்து, தெற்கே வாழுகின்ற தமிழர்களுக்கு வட இந்தியாவையும், அதனைத் தாண்டி உள்ள ஈரானையும் தாண்டி இருக்கின்ற சுமேரியா அதாவது இன்றைய ஈராக்குடன் தொடர்பாம்.அவ்வாறெனில், ஈரானில் இருந்து ஆரியன் வந்தான் என்றால், ஈராக்கில் இருந்து திராவிடன் அதாவது தமிழன் வந்தானா என்று கேட்டால், “கல்தோன்றி மண்தோன்றா” என்று ஆரம்பித்து விடுவார்கள். “வடக்கில் வாழ்ந்துவந்த தமிழனை வந்தேறி ஆரியன் விரட்டிவிட்டான்” என்பார்கள். சில சமயங்களில் ஆரியனை வட இந்தியன் என்பார்கள், மறுசமயத்தில் பார்ப்பனன் மட்டுமே என்பார்கள்.

இவர்கள் சொல்லுகின்ற இத்தனைக் கதைகளுக்கும் சங்க இலக்கியங்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா? முடியாது. அதேநேரத்தில் பாரதத்தின் பிற பகுதிகளோடு நமது தமிழகத்துக்குப் பண்டைக் காலத்தில் இருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. (தொடர்பு என்பதே தவறு, பாரதத்தின் மிகச் சிறந்த அங்கமே நம் தமிழகம்.) அத்துடன் வேதகால நாகரீகத்துக்கும், பண்டைத் தமிழர் நாகரீகத்துக்கும் அசைக்க முடியாத ஒற்றுமை உண்டு என்பதை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க கால இலக்கியங்கள் மூலமே நாம் நிரூபிக்க முடியும். அவை குறித்து இனி அடுத்தடுத்துப் பார்ப்போம்.
-– தொடரும்

கட்டுரையாளர் அறிமுகம்
பத்மன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக கதை, கவிதை, கட்டுரைகளை எழுதிவரும் நா. அனந்த பத்மநாபன், பத்திரிகை–-ஊடகத் துறையில் 30 ஆண்டுக்கால அனுபவம் வாய்ந்தவர். தினமணி நாளிதழ், சன் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, வின் டிவி உள்ளிட்ட ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.கடந்த 2005-இல், இதழியல் குறித்து இவர் எழுதிய மூன்றாவது கண் என்ற நூல், சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதை வென்றது. திக்கெட்டும் திருமுருகன், ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே, தத்துவ தரிசனம், முடியாத முடிவு (கவிதைத் தொகுப்பு), கருணைக்கு மறுபெயர் கசாப் (கட்டுரைத் தொகுப்பு), யாரும் சொல்லாத கதைகள் (சிறுவர் கதைகள்), சிவகளிப் பேரலை (சிவானந்த லஹரியின் தமிழ் மொழிபெயர்ப்பு), தென்முகக் கடவுள் துதி (தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்), ஆறுமுக அரவம் (சுப்ரமண்ய புஜங்கம்), அறுபடை அந்தாதி ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கரின் “Six Epochs of Indian History” நூலை, “பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்” (விஜயபாரதம் பிரசுரம் வெளியீடு) என்ற தலைப்பில் அண்மையில் மொழிபெயர்த்துள்ளார்.