வங்கிகளில் பாதுகாப்பு பெட்டகம் எனப்படும் லாக்கர் வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவரி,1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ‘வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி, வங்கியின் கவனக்குறைவு, தீ விபத்து, வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதம் உள்ளிட்டவை நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு இழப்பீடாக வங்கி வழங்க வேண்டும். ஆனால், நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்திலோ, வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது. பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகளுக்கான குறித்த கால வைப்பு நிதியை வங்கிகள் ஏற்கலாம். இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகையை வாடிக்கையாளர் செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டப்புறம்பான, அபாயகரமான பொருட்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும். கிளை வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விபரங்களை வங்கிகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிட வேண்டும்’ என்பது போன்ற விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.