கேரளாவின் 31 வயது முஸ்லிம் பெண் தன் 41 வயது கணவரை குலா முறையில் விவாகரத்து செய்துள்ளார். இதை ஏற்காத அவரது கணவர், பெண்களுக்கு தலாக்கை போல ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை இல்லை என மறுத்துள்ளார். இதற்காக கல்பேட்டாவின் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அப்பெண்ணின் கணவர். அதில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் பதிக்கப்பட்ட அந்த பெண். இதேபோல, கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வேறு சில முஸ்லிம் பெண்களும் தங்களது பிரச்சினைகளால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குகளைத் தொடுத்திருந்தனர். இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, குலா முறை செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து நீதிபதிகளான முகம்மது முஸ்தாக், சி.எஸ்.டயாஸ் ஆகியோர் அளித்த தீர்ப்பில், ‘இஸ்லாமியர்கள் இடையே கணவன், மனைவி இருவருக்குமே ஒருதலைப்பட்சமாக விவாகரத்து அளிக்க உரிமை உள்ளது. இதற்கான குறிப்பு அவர்களது மதத்தின் புனித நூலான குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, முஸ்லிம் பெண்களின் குலா முறை செல்லும். இந்த குலா முறையில் விவாகரத்து பெறும் மனைவி, தான் திருமணத்தின்போது கணவரிடம் பெற்ற ‘மெஹர்’ எனும் ரொக்கத்தை திருப்பி அளித்து விட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை அந்த மனைவி தரத் தவறினால் அதற்காக அவரது கணவர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளனர்.