ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன். “குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். குரங்கு அம்மையானது பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த குரங்கு அம்மை வகை வைரஸால் உருவாகிறது. பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. எனினும் குரங்கு அம்மைக்கு என பிரத்யேகமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதன் தடுப்பூசி தயாரிப்பில் பாரதம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கிறேன். நாம் மற்றொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். அதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கலாம். புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இதை முன்னெடுக்கலாம். குரங்கு அம்மை என்பது வேறு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அது கரோனா வைரஸ் போல் வேகமாக உருமாறாது. இதன் பாதிப்பு மற்றும் மரபணு பகுப்பாய்வு தரவுகளை உலக நாடுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும். குரங்கு அம்மை இன்னொரு பெருந்தொற்றாக உருவாகாமல் தடுக்க வேண்டும்” என்றார்.