மோடியின் வங்கதேசப் பயணமும் ராஜதந்திரமும்

வங்கதேசம் சுதந்திரமடைந்த பொன் விழாக்கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, வங்கதேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்குப் புகழாரம் சூட்டியது மட்டுமல்லாமல், சில அரசியல் காய்களையும் நகர்த்தியுள்ளார். பங்களாதேஷ் உருவாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கும் உள்ளது என்ற உண்மையை வெளி உலகிற்கு தெரிய வைத்தார்.

பங்களாதேஷ் நாட்டின் அரசு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்திய போது, ”நானும் எனது சகாக்களும் வங்கதேசத்தின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து எனது 20  வயதில் சத்யாகிரகப் போராட்டங்களுள் ஈடுபட்டோம்” என்றார் பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளாகவே சீனா வங்கதேசத்தை தனக்கு சாதகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற இச்சூழ்நிலையில் இந்தப் பயணம் பயனுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் , 2021 மார்ச் மாத ஆரம்பத்தில் இரு பிரதமர்களும் திரிபுராவில் சப்ரூம் – பங்களாதேஷின் ராம்கரை இணைக்கும் மைத்ரி பாலத்தைத் திறந்தனர். இந்த நிகழ்வின் மூலம் அகர்தலாவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள சிட்டகாங் துறைமுகத்திற்கு மைத்ரி பாலம் சிறந்த இணைப்பை வழங்கும். பாரதம் – பங்களாதேஷ் இரு நாடுகளும் ஏழு ஒப்பந்தங்களுள் கையெழுத்திட்டன. இதில் திரிபுரா ஒரு முக்கியப் பயனாளியாகவும், சர்வதேச கடல் வர்த்தகப் பாதைகளுக்கு நேரடியாக அணுகக்கூடிய முதல் வடகிழக்கு மாநிலமாகவும் இது மாறும். பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட இரு நாடுகளும் இசைந்தன.

மேலும், வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக சுகாதாரம், வர்த்தகம், எரிசக்தி, மேம்பாட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஏனெனில், சீனா நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற நாடுகளுக்கு நிதி உதவி அளித்து, பாரதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முயன்று வருகின்ற இச்சூழ்நிலையில் இந்தப் பயணம் அதிமுக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனது பயணத்தின் இரண்டாம் நாளில் கோபால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரகண்டி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார் பிரதமர் மோடி. அத்துடன், இங்கு வாழ்ந்து வரும் மதுவா இந்து சமூகத்தினரிடையே உரை நிகழ்த்தினார். மதுவாப் பிரிவினர் சுமார் 3 கோடி பேர் மேற்கு வங்க மாநிலத்தில் வசிக்கிறார்கள். பங்களாதேஷ் முஸ்லீம்களால் துன்புறுத்தப்பட்டதால், நமசுத்திரர்கள் அல்லது மதுவா மக்கள் இயல்பாகவே இந்து மதப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.

பா.ஜ.க., 2019-ல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டு வந்ததன் காரணமாக, மதுவா மக்களின் ஊடுருவல் கணிசமாக உயர்ந்துள்ளது. 2021ல் மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மதுவாக்கள் நம்புகிறார்கள். மதுவாக்களின் மனநிலையை உணர்ந்து, பா.ஜ.க. தனது மாநிலத்தில் தேர்தல் அறிக்கையில் மதுவா சமூகத்தை வலிமையாக மாற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சி.ஏ..ஏ.வை நடை முறைப்படுத்துவோம் என்று கூறியுள்ளதை வலிமையாக்க மோடி தனது பயணத்தின் போது ஒரகண்டி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

பின்னர், அங்குள்ள மதுவா மக்களை சந்தித்து உரையாடினார். அதேசமயம் இங்குள்ள மதுவா மக்களுள் பாதிக்குமேல் உள்ளவர்களுக்கு குடியுரிமையும், வாக்குரிமையும் கிடையாது. மோடி அரசாங்கம் கொண்டுவந்த குடியுரிமைத் திருத்த சட்டத்தின் மூலம் வங்க தேசத்திலிருந்து அடைக்கலமாக வந்த மதுவாப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தும்கூட, அதை செயல்படுத்த விடாமல் மேற்குவங்க அரசு செயல்பட்டு வருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள 24 பர்கானா, நாடியா போன்ற மாவட்டங்களுள் மதுவா பிரிவினர் வாழ்கிறார்கள். இவர்கள் ஆறு நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றித் தோல்விகளை நிர்ணயம் செய்யும் சக்தி வாய்ந்தவர்கள். எனவே, மதுவா சமூகத்தவரின் பூர்வீகமான ஒரகண்டி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியதன் மூலம் மதுவாப் பிரிவினருக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டினார்.

பிரதமர் மோடி தனது பயணத்தில் டாக்காவில் ஆளும் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்ததும், 1971 போரில் போராடிய முக்திஜோதாக்கள் எனப்படும் சுதந்திரப் போராட்டப் பிரதிநிதிகளுடன் உரையாடினார். இத்துடன் பங்களாதேஷின் மதச் சிறுபான்மையினரின் தலைவர்களையும் சந்தித்தார். நினைவு கூர்ந்த மோடி 2015-ல் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு, ‘Liberation War Honour’ என்ற கௌரவம் வழங்கப்பட்டது. ஜன சங்கம் 1971, ஆகஸ்ட் 1 முதல் 11 வரை கண சத்யாகிரகத்தை ஏற்பாடு செய்தது என்றும், ஜனசங்கத் தொண்டர்கள் ஆகஸ்ட் 12 அன்று பாராளுமன்றத்தின்முன் பேரணியை நடத்தினர் என்றும் 1971 பங்களாதேஷின் விடுதலைப் போருக்கு பாரத அரசாங்கத்தின் விரைவான ஆதரவைக் கோருவதற்கு ஜனசங்கம் சத்யாகிரகம் நடத்தியதாகவும் பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது.

மோடி பங்கேற்ற ‘சத்யாக்கிரகம்’ இதுதான் என்றும், அதற்காக தான் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளுள் பன்முகத்தன்மை கொண்டவையாக மாற்றியுள்ளன. வர்த்தகப் பரிவர்த்தனைகள், கூட்டுமுயற்சிகள், போக்குவரத்து வசதிகள், போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றைத் தழுவுகின்றன. பாரதத்தின் மிகப்பெரிய நிதி உதவியைப் பெற்றது பங்களாதேஷ். பிரதமர் மோடி தனது முந்தைய பயணத்தின்போது (ஜூன் 6-7, 2015), பங்களாதேஷுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்தக்கடன் வசதிகளைக் கொண்டு பங்களாதேஷ் தனது 14 உள்கட்டமைப்புப் போக்குவரத்துத் திட்டங்களை முடிக்கப் பயன்படுத்துகிறது.

பாரதம், மியான்மர், தாய்லாந்து இடையேயான முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தில் பங்களாதேசும் இணைந்துள்ளது. இது மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. முந்தைய காலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றுள் பங்களாதேஷ்-பாரதம் உறவுகள் ஒருபோதும் சிறப்பாக இருந்ததில்லை என்று கூறினாலும், பாரதத்தின் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் பங்களாதேஷ் பாரதத்திற்கு கவலையளிக்க கூடிய நாடாகவே இருந்துவருகிறது. பங்களாதேஷ் மண்ணிலிருந்து பாரத எதிர்ப்பு பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளை முகாமிட்டு நடத்தி வந்த ஏராளமான வடகிழக்கு பாரதக் கிளர்ச்சியாளர்களை மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் பங்களாதேஷ் பாரதத்துடன் ஒப்படைத்துள்ளது. இருதரப்பினருக்கும் இடையே ஒப்படைப்பு ஒப்பந்தமில்லை எனினும் பங்களா தேஷ் அரசு இதைச் செய்தது. அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) கிளர்ச்சியாளரும், இந்திய பாதுகாப்பு நிறுவனத்திற்குத் தொடர்ச்சியான தலைவலியுமான அனுப்செட்டியாவை பாரதத்திடம் ஒப்படைத்துள்ளது.

பங்களாதேஷ் நாட்டின் ஒத்துழைப்புடன் ஜமாஅத் -உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் எனும் அமைப்புடன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பாரதம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற இந்த உறவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதே காலகட்டத்தில், மேற்கு வங்க மாநில ஆளும்கட்சியினர் ஜமா-அத்- உல்- முஜாஹிதீன் பங்களாதேஷ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.