எம்.எல்.ஏ வெற்றிபெற்றது செல்லாது

கடந்த 2021ம் ஆண்டு கேரளத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தனி தொகுதியில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஏ. ராஜா வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வானார். தமிழரான இவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி. குமாரைவிட 7,848 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். இதனிடையே, ராஜா, தான் ஒரு கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து போட்டியிட்டதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி. குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், கிறிஸ்தவ பெற்றோர் ஆண்டனி மற்றும் எஸ்தர் ஆகியோருக்கு பிறந்த ராஜா, எப்போதும் கிறிஸ்தவராகவே வாழ்ந்து வந்துள்ளார். ராஜா ஒரு சர்ச்சில் முறைப்படி ஞானஸ்நானம் பெற்றவர், ராஜாவின் மனைவி ஷைனிப்ரியாவும் ஒரு கிறிஸ்தவர், அவர்களின் திருமணம் கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி நடந்தது எனக் கூறியுள்ளார். அவர்களது திருமண புகைப்படத்தை நீதிமன்றத்தில் சாட்சியமாக தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அந்த சர்ச்சின் குடும்பப் பதிவேடு, தகனப் பதிவேடு உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தது. பின்னர் அளித்த தீர்ப்பில், எம்.எல்.ஏ ராஜா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. எனவே, அவர் தேவிக்குளம் சட்டசபைத் தொகுதியில் வெற்றிபெற்றது செல்லாது” என உத்தரவிட்டது. எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராஜாவுக்கு சி.பி.எம் மாநிலக் குழு அனுமதி அளித்துள்ளது.