பாரதத்தையும் பங்களாதேஷையும் இணைக்கும் ‘மைத்ரி சேது’ பாலத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பாரதம், பங்களாதேஷ் எல்லையில் ஓடும் ‘பெனி’ ஆற்றின் மீது ‘மைத்ரி சேது’ பாலம் கட்டப்பட்டுள்ளது. ‘மைத்ரி சேது’ என்ற பெயர் பாரதத்துக்கும் பங்களாதேஷுக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளையும் நட்பு உறவுகளையும் குறிக்கிறது. இந்த கட்டுமானத்தை தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இணைந்து ரூ. 133 கோடி ரூபாய் திட்ட செலவில் மேற்கொண்டது. 1.9 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் பாரதத்தின் திரிபுராவில் உள்ள சப்ரூமை பங்களாதேஷில் உள்ள ராம்கருடன் இணைக்கிறது. இதனால் பாரதம் – பங்களாதேஷுக்கும் இடையிலான மக்கள் போக்குவரத்து, வர்த்தகம் மேம்படும். மேலும் இந்த பாலம், பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை இணைக்கும் வகையில் வடகிழக்கின் நுழைவு வாயிலாக மாற உள்ளது. இதனுடன் இணைந்து, சப்ரூமில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் பிரதமர், NH 44, NH 208, ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 40 ஆயிரத்து தொள்ளாயிரத்து 78 வீடுகள், அகர்தலா ஸ்மார்ட் சிட்டி திட்ட்த்தின் கீழ் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையம் போன்றவற்றையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.