வினோபா பாவே தனது இளமைப் பருவத்தில், கல்வியிலும் ஒழுக்கம் கட்டுப்பாட்டிலும் சிறந்து விளங்கினார். அவரது அன்னையார், ஒரு முறை கீதைச் சொற்பொழிவைக் கேட்கப் போயிருந்தார். ஸ்லோகங்கள் ஸம்ஸ்கிருதத்தில் இருந்தமையால் அவருக்குத் தெளிவாகப் புரியவில்லை. வீட்டுக்கு வந்து, அவர் தனது மகன் விநாயக்கை அழைத்தார். அவரிடம் அன்னையார், “நான் கீதைச் சொற்பொழிவுக்குப் போயிருந்தேன். எல்லாம் ஸம்ஸ்கிருதத்திலேயே இருந்தது. மராத்தியில் இருந்தால் எனக்கும் புரிந்து படிக்க வாய்ப்பாக இருக்கும்” என்றார். தனது அன்னையின் விருப்பத்தை நிறைவேற்றிட விநாயக், மராத்தி மொழியில் விளக்கமுள்ள கீதை நூல் ஒன்றை வாங்கி வந்து கொடுத்தார்.
அதைப் படித்துப் பார்த்த அவர், ”உரைநடை மொழியில் இருக்கிறது! மராத்தி மொழியில் செய்யுகளுடன் இருந்தால் பாடலுடன் படிக்கலாமே!” என்று கூறினார். மறுவாரமே மராத்திச் செய்யுளிலுள்ள கீதை ஒன்றைக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தார் விநாயக்.அவர் அதையும் பலமுறை படித்துப் பார்த்த பின்பு அதுவும் அவருக்கு மிகக் கடினமாக இருந்தது. அவர் தம் மகனிடம், “இதிலுள்ள செய்யுள்கள் கடினமாக உள்ளது. செய்யுளும் எளிமையாக இருந்தால் எல்லோரும் படித்துக் புரிந்து கொள்ளலாமே?” என்றார்.
விநாயக், ‘இதற்கு என்ன செய்ய?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். அன்னை படித்துணர, ஒரு நல்ல கீதை நூலைக் கொடுக்க முடியவில்லையே என்ற கவலை அவருக்கு. தாயார் மீண்டும் தம் மகனிடம், ”ஏன் விநாயக், எளிமையான மராத்தி மொழியில் எனக்காக நீயே எழுதினால் என்ன?்” என்று விருப்பத்தை வெளியிட்டார். அதையே ஓர் உறுதியாகக் கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் தம் அன்னையின் விருப்பப்படியே, ‘கீதாயா’ என்ற நூலை மராத்தியில் எழுதி முடித்தார். ஆனால் அதைப் படிக்கத்தான் அவரது அன்னை உயிரோடு இல்லை.