ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டித்வால் பிரதேசத்தை பாரத ராணுவம் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
1948 அக்டோபர் 13 ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், டித்வால் பிரதேசத்தின் தென்பகுதியில் உள்ள ரிச்மார் கலி மீது தாக்குதல் தொடுத்தனர். முன்னணி ராணுவ நிலையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீக்கியப் படைப் பிரிவுக்கு லான்ஸ் நாயக் கரம் சிங் தலைமை ஏற்றிருந்தார். ஆனால், இந்த வீரர்களோ எதிரியின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பகுதி அளவிலேயே இருந்தனர்.
தொடர் தாக்குதல் காரணமாக பாரத ராணுவத்தினரால் கூடுதல் படைப் பிரிவைச் சேர்க்கவோ, ஆயுதங்களைக் கொண்டு வரவோ முடியவில்லை. தனது இரண்டு கரங்களிலும் காயம் பட்டிருந்தாலும் கரம் சிங் எதிரிகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், ஒவ்வொரு நிலைக்கும் சென்று படையினரை ஊக்கப்படுத்தியும் வந்தார். மேலும் காயப்பட்ட இரு வீரர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்த்தார்.
ஐந்தாவது கட்டத் தாக்குதலில் தமது பதுங்கு குழியை நெருங்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவரை, கரம் சிங் கத்தியால் குத்திக் கொன்றார். எட்டாவது சுற்றுத் தாக்குதலின் முடிவில் பாரத ராணுவத்தின் சீக்கியப் படைப் பிரிவினர் 15 பேரை நாம் இழந்திருந்தோம். ஆனால் நாம் கொன்று குவித்த பாகிஸ்தானியப் படையினர் 300 க்கும் மேல்.
ஆயுதக் கையிருப்பும், ஆட்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த போதும் சிறிது கூடப் பின்வாங்காமல் போராடிய பாரத ராணுவத்தினரின் அசாத்தியத் துணிச்சல் பாகிஸ்தான் ராணுவத்தினரைத் திணறடித்தது. இந்த முறையும் ஒரு பதுங்கு குழியைக் கூடக் கைப்பற்ற முடியாமல் பாகிஸ்தானியர்கள் தோற்று ஓடினர்.
இக்கட்டான சூழலிலும் மனம் தளராமல் போரிட்டு, தனது படை வீரர்களையும் ஊக்கப்படுத்தி, டித்வால் பகுதியைப் பாதுகாத்த லான்ஸ் நாயக் கரம் சிங்-ன் வீரத்தை, துணிச்சலைப் போற்றி மத்திய அரசு பரம்வீர் சக்ரா விருது வழங்கிக் கௌரவித்தது. உயிரோடு இருக்கும் போதே இப்பதக்கம் பெற்ற முதல் வீரர் இவரே. சுதந்திரத்திற்குப் பின் நமது கொடியை ஏற்றிய ஐந்து ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.
– கரிகாலன்