மதுரை என்றால் நம் நினைவுக்கு வருபவை மல்லிகை மலரும், அதனை அள்ளி வரும் சித்திரை மாதமும் அந்த மாதத்தின் தனிச் சிறப்பான மீனாட்சி – சோமசுந்தரேஸ்வரர் திருமணத் திருவிழாவும் அல்லவோ!
பழுத்த பண்பாடு
இன்றைய மதுரை மாநகரம் நீண்ட நெடிய வரலாற்றுப் பெருமையைக் கொண்டது. மிகவும் சுருக்கிப் பார்த்தாலும், பொது ஆண்டுக்கு முன் 6ம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மக்கள் வாழ்ந்ததற்கு இலக்கியம், சாணக்கியரின் குறிப்புகள் போன்ற நம்மவர்கள் அளித்த சான்றுகளும் மெகஸ்தனிஸ் முதலான அயல்நாட்டு வழிப்போக்கர்கள் எழுத்துக்களும் ஆதாரமாகின்றன.
வைகை ஆற்றின் கரையில் வளர்ந்த செழிப்பான நகர நாகரிகம். வைகைக்கு வையை, வேகவதி, க்ருதமாலா என்று பல பெயர்கள் உள்ளன. பாகவதம் திருமாலின் தசாவதார வரிசை க்ருதமாலா நதியில் சத்தியவிரதன் என்ற அரசனின் கையில் மீனாய்த் (மத்ஸ்ய) தோன்றியதில் இருந்துதான் துவங்குகிறது என்று சொல்கிறது. அவ்வரசனின் பெயரை மீண்டும் ஒருமுறை படியுங்கள்- சத்திய விரதன் – உண்மைக்காக வாழ்வதையே தவ நெறியாய்க் கொண்டவன். அப்படிப்பட்ட மெய்யுணர்வுடன் ஆட்சி நடத்திய மதுரைக்கு மூப்புண்டோ, அழிவுண்டோ? இறைவனைப் (ஏன் இறைவியும் தான்) போலவே முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் மதுரை ஓர் எடுத்துக்காட்டு.
ஏனாம் இந்த பெயர்?
தொன்மையான வரலாறு காரணமாய் ஒவ்வொரு காலகட்டத்திலும் மதுரை, கடம்பவனம், ஆலவாய், நான்மாடக்கூடல், கூடல் மாநகரம். மல்லிகை நகரம், வெள்ளியம்பலம், தூங்காநகர் என்று பல வேறு பெயர்களால் அழைக்கப் பட்டுள்ளது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தைப் படித்தால் இன்னும் பல பெயர்களைப் பார்க்கலாம்.
இப்போதைய மதுரை எப்படி வந்திருக்கலாம்? மருத நிலப் பகுதியில் அமைந்துள்ளதால் அல்லது வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மண்டி இருப்பதால் மருதை என்றாகி பின்னால்மதுரை என்று மாறி யிருக்கலாம் என்பது மொழி அறிஞர்களின் கருத்து. தமிழகக் கல்வெட்டி யலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை (மதிலால் சூழப்பட்ட நகரம்) என்பதையும் கவனிக்க வேண்டும்.
தாயின் ஆளுகை மணம்
அயோத்தி என்றால் ராம ராஜ்ஜியம் என்பதைப் போலவே மதுரை என்றால் அன்னை மீனாட்சியின் ஆளுகைப் புகழ் பாட வேண்டும். ஆம், கல்வி, கலை, குணம், வீரம் என்று எல்லாவற்றிலும் எம் அன்னை பேரரசி தான். அரச குலத்துக்கே உரிய நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் பெரும் வெற்றி கண்டவள். சிவ பெருமானைத் தவிர வேறு எவராலும் தோற்கடிக்கப்பட முடியாதவளாய் ஒப்புயர்வற்ற ஆட்சி புரிந்த அங்கயற்கண்ணி, அபிராமவல்லி, கோமகள், மரகதவல்லி, சுந்தரவல்லி அவள்.
சீர்மிகு சித்திரைத் திருவிழா
மதுரை நகரின் உள்ளும் சுற்றிலும் கோவில்கள் உயர்ந்து விளங்குகின்றன. ஆகையால், திருவிழாக்களும் உற்சவங்களும் ஆண்டு முழுவதும் உண்டு. அவற்றுள் தலையானது தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் நிகழும் மீனாக்ஷி- சோமசுந்தரேஸ்வரர் திருமண விழா. மீனாக்ஷி அம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது நம் அம்மையும் அப்பனும் பூத அன்ன வாகனத்தில் திருவீதிவுலா. கைலாச காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா, தங்கப் பல்லக்கில் புறப்பாடு, குதிரை வாகனத்தில் பவனி- வேடர்பறி லீலை, நந்தீஸ்வர-யாளி வாகனத்தில் பவனி என்று ஒவ்வொரு நாளும் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து மக்களுக்கு தரிசனம் அளிப்பார்கள்.
தேரோட்டமும், சொக்கநாதர்- மீனாக்ஷி பட்டாபிஷேகமும், கள்ளழகர் திருமாலிரும்சோலையிலிருந்து புறப்பட்டு தேனூர், வண்டியூர், தல்லாகுளம் என்று பல ஊர்களிலும் தங்கியிருந்து மக்களுக்கு சேவையளித்து தங்கையாம் மீனாக்ஷிக்கு திருமணச் சீர் அளித்து, வைகை ஆற்றில் இறங்கி பின்னர் மீண்டும் அழகர் கோயிலுக்குத் திரும்புவது போன்ற நிகழ்வுகள் இன்னமும் கூடுதல் சிறப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒவ்வொரு சமூகத்தவரும் அவரவர் அலங்காரம்- நிவேதனம் – மரியாதை அளிப்பது, சுய சமூகத்துப் பெருமையைக் காக்கவும், பிற சமூகத்தவருடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் வழி வகுக்கிறது.
தெய்வீக மணம்
ஆலவாய் அழகன் சொக்கநாதர், அவர் ஆற்றிய 64 திருவிளையாடல்களும் சைவத்தின் பெருமையும், மதுரை ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் நம்மை வரவேற்றுக் காட்சி அருளும் கூடலழகர் பெருமாளும் அவருக்கு பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும் வைணவத்தின் பெருமையையும் பேசுகின்றன, மீனாக்ஷி – மனோன்மணியாய், கண்ணினால் தன் சீடர்களுக்கு நல்லுபதேசம் செய்து வழிகாட்டுபவளாயும் சாக்தர்களால் துதிக்கப் படுகிறாள். மீனாக்ஷி- சொக்கநாதர் கோவிலில் உள்ள பிரம்மாண்டமான முக்குறுணிப் பிள்ளையாரும் திருப்பரங்குன்றம் – பழமுதிர் சோலையும் அண்ணன் தம்பி மேன்மையை விளக்கி தெய்வீக மணம் வீசுகின்றன.
தமிழ் மணம் – தேசிய மணம்
சங்க காலம் துவங்கி, ஆழ்வார்- நாயன்மாராதிகள் என்று வளர்ந்து இன்று வரை தமிழ்த் தொண்டில் உயர்ந்து விளங்கி வருவது மதுரை. தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்து நாடெங்கும் கோட்டு சூட்டுடன் சுற்றுப் பயணம் செய்து வந்த மிஸ்டர் காந்தியை வேட்டி- துண்டுக்கு மாற்றி மகாத்மாவாக்கியது, அவர் அவாவான ஜாதி வேற்றுமையைக் களைந்து ஹரிஜன ஆலய பிரவேசத்தை நிகழ்த்திக் காட்டிய வைத்தியநாத அய்யர்- முத்துராமலிங்கத் தேவர் பெருமகனார்,- கக்கன்,- சுபாஷ் சந்திர போஸ் வழி நின்று இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு கொண்டது என்று தேசிய மணம் பரப்புவதும் மதுரையே.
– ஸ்ரீகிருஷ்ணா