பாரதத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 16 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. தற்போது, தமிழகத்தில் மதுரை உட்பட 8 இடங்களில் புதியதாக எய்ம்ஸ் மருத்துவமனைகள் துவங்கப்பட உள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின், 2019 ஜனவரி 27ல் பிரதமர் மோடி அதற்கு அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் இம்மருத்துவமனை கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், கொரோனா, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டுமான பணி துவங்கவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் பாண்டியராஜா எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ‘மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறைகள் துவங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளது.