எண்ணை கிணறுகளை பார்வையிடலாம்

பாரதம் சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத்திய அரசின் கச்சா எண்ணை உற்பத்தி நிறுவனமான ஓ.என்.ஜி.சி, அதன் பாதுகாக்கப்பட்ட கச்சா எண்ணை துரப்பணம் நடக்கும் எண்ணை கிணறுகளையும் எண்ணை எடுக்கும் முறைகளையும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் முதல் வரும் ஜனவரி 2022 வரை சுமார் 100 மாணவர்களை கொண்ட 25 குழுக்கள் இதனை பார்வையிட உள்ளன. அகமதாபாத், மெஹ்சானா, அன்கலேஷ்வர், கம்பே, காவிரி படுகை உள்ளிட்ட பல இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் சமீபத்தில், ஓ.என்.ஜி.சியின் குத்தாலம், நரிமணம் ஆகிய பகுதிகளுக்கு புதுச்சேரி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். இதில், ஓ.என்.ஜி.சியின் மூத்த தொழில்நுட்ப அதிகாரிகள் மாணவர்களுடன் உரையாடி செயல்பாடுகளை விளக்கினர். கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 100 மாணவர்கள் தலா 10 மாணவர்கள் கொண்ட சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.