எந்த ஒரு சாதாரண மனிதனும் இந்த உலகில் தற்காலிகமாக ஒரு சில நல்ல மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்த முடியும். ஆனால் அந்த நல்ல மாற்றங்கள் காலம் கடந்தும் வாழ வேண்டும், பலருக்கும் பயன்பட வேண்டும், அதனால் உலகையே மாற்ற வேண்டும் என விரும்பினால்!? அதற்கு பலத்தை பிரயோகிப்பது அரசியலில் ஈடுபடுவது போன்ற பெரிய முயற்சிகள் எல்லாம் தேவை இல்லை.
நல்ல கதைகளை சொல்லுங்கள் போதும். உங்கள் கதை, இந்த உலகை நீங்கள் விரும்பியது போலவே மாற்றும் சக்தி கொண்டது. கவிதைகளோ செய்திகளோ செய்யமுடியாத அரும் பெரும் காரியங்களை எளிய கதைகள் செய்துவிடும்.ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இதுதான் உண்மை. இதற்கு நல்ல உதாரணம் நமது புராணங்களும் இதிகாசங்களும் தான். பெரும் தத்துவங்கள், கருத்துகள், நீதிபோதனைகள், வாழ்வியல், ஆன்மிகம், மனநலம், உடல் நலம் என சொல்லப்படாத விஷயங்களே இதிகாச புராணங்களில் கிடையாது.
ஆனால், இவை காலப்போக்கில் மறையவில்லை. தொழில்நுட்ப மாற்றங்களுக் கேற்ப அவை மாற்றம் பெற்றாலும் அதன் சாராம்சம் குறையாமல் இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கின்றன. பல தலைமுறைகளாக தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு இந்த விஷயங்கள் அப்படியே உயிர்ப்புடன் கடத்தப்படுகின்றன என்றால் அதற்கு காரணம், அவை அனைத்து வயதினருக்கேற்ற வகையில் அழகான கதை வடிவில் சொல்லப்பட்டதால் தான். அந்த காலம் தொட்டு இன்றுவரை உலகில் எவ்வளவோ பணக்காரர்கள், வியாபாரிகள், மருத்துவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் இருந்துள்ளனர். வியத்தகு மாற்றங்களை இந்த உலகிற்கு அவர்கள் கொடுத்துள்ளனர்.
ஆனால் காலப்போக்கில் அவர்களின் பெயர் மக்களால் மறக்கப்படுகிறது. மக்கள் மனதில் நிற்பவர்கள் மிகச் சிலர்தான். அதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் கண்கள் வழியாகவே அந்த காலத்தில் அரசன், ஆட்சி,நிகழ்வுகள், வாழ்க்கைமுறை போன்ற அனைத்தையும் நாம் அறியமுடிகிறது. அதுவே வரலாறாகிறது. காலத்தின் கண்ணாடியாக திகழ்கிறது. எழுத்தாளர்கள் கூறிய விஷயங்கள் எவ்வளவு தான் ஆழமானவையாக இருந்தாலும் அவை, மக்கள் படிக்க ஏதுவாக அழகிய கதை வடிவில் எளிமையாக இருந்தால் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
நீண்ட காலம் நினைவில் வைத்துக்கொள்ளப்படுகிறது. கதை வடிவில் அதில் உள்ள பல நல்ல விஷயங்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லப் படுகிறது. செயல்படுத்தவும் படுகிறது, அதனால் உலகில் பல நல்ல மாற்றங்கள் வருகிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.நீங்களும் உங்கள் கதைகளை உருவாக்குங்கள், பரப்புங்கள். நீங்கள் விரும்பியபல நல்ல மாற்றங்கள் காலப்போக்கில் மெல்ல தானே உருவாகும்.