கலவரக்காரர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்

ராம நவமியையொட்டி பீகாரில் ஹிந்துக்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. மார்ச் 31 அன்று பீகாரின் நாலந்தாவில் உள்ள பிகார்ஷரிப் மற்றும் ரோஹ்டாஸில் உள்ள சசாரம் பகுதியில் மீண்டும் மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பிறகு 10 கம்பெனி துறை ராணுவப்படைகள் பீகாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏப்ரல் 4ம் தேதி வரை அங்கு இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நாளந்தா மற்றும் சசாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புவாத பதற்றம் காரணமாக பீகாரின் சசாரம் பகுதிக்கு செல்ல திட்டமிட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அவர், “சசாரம் எரிகிறது, பீகார் ஷரீப் எரிகிறது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் முழு மெஜாரிடியுடன் வெல்லும்போது இந்த கலவரக்காரர்களைத் தலைகீழாகத் தொங்கவிடுவோம். எங்கள் ஆட்சியில் கலவரங்கள் நடைபெறாது” என்று கூறினார். மேலும், “சாம்ராட் அசோகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நான் இன்று சசாராமுக்கு எனது பயணத்தை ரத்து செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சசாரத்தில் மக்கள் தாக்கப்படுகிறார்கள்” என கூறிய அமித்ஷா, “எனினும், விரைவில், மௌரியப் பேரரசரின் விழாவில் கலந்துகொள்வதற்காக விரைவில் சசாரம் செல்வேன்” என கூறினார். மேலும், மார்ச் 31 அன்று நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்ய பீகார் ஆளுநரிடம் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இதற்கு ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசியத்தலைவர் லாலன் சிங் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து பேசிய அமித் ஷா, “சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பீகார் ஆளுநரை நான் தொடர்புகொண்டு பேசினேன். ஏனெனில், நான் நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறேன், மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்ய எனக்கு உரிமை உள்ளது” என்று கூறினார்.