கோலம் என்பது ஒரு கலை. அது நம் கலாச்சாரத்தில் ஊறிப்போன தினசரி கடமை என்றே சொல்லலாம். தினமும் வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது பூமாதேவிக்கு செய்யும் பூஜை. மேலும், சூரிய பகவானுக்கு கூறும் வரவேற்பு. வீட்டு வாயிலில் உள்ள கோலம் பவித்ரமானது. நம் தெய்வங்களின் மூல யந்திரங்களும் கூட ஒரு வகையில் கோலங்களே. வீட்டின் முன் தெளிக்கப்படும் சாணம் அதன் புனிதமான மருத்துவ குணத்தினால் கிருமிகளை அண்டவிடாமல் வீட்டுக்குத் தேவையான தூய்மையான பாதுகாப்பை அளிக்கிறது.
மங்களகரமான திருமணம் போன்ற சுப தினங்களில் கட்டாயம் காவி இட்டு போடும் சம்பிரதாயமான கோலங்கள் கண்ணை பறிக்கும். அதே போல் பித்ரு ஆராதனை தினங்களை வாசலில் கோலம் இல்லா ததை வைத்தே கண்டுப்பிடுத்து விடுவார்கள். கோலம் போடும் நேரம், இடம், தரை, அதன் ஈரப்பதம் போன்ற பல காரணங்கள் கோலத்தின் தரத்தை நிர்ணயிக்கும் என்பதை அறிவீர்களா? விடியற்காலையே கோலம் போடுவது பல நன்மைகளை அளிக்கிறது.
புள்ளி வைத்து கோலம் போடுவதற்கும் வாழ்க்கை என்னும் சம்சார சாகரத்தில் நீந்தி கரை ஏறுவதற்கும் ஒற்றுமை உண்டு. ஏனெனில் தரையில் இடப்படும் சிக்கலான புள்ளிகளை கொண்டு அங்கும் இங்கும் இழையை இழுத்து ஒன்றுக் கொன்று ஒட்டாமல் அதேநேரம் தப்பாகாமல் கோலத்தை நினைத்தபடி முடிப்பதென்பது உண்மையாகவே ஓர் கலை தான்.
ஒரு சிற்பி எவ்வாறு ஒரு கல்லில் சிலையைக் கண்டு அதை செதுக்கி உருவாக்குவாரோ அதேபோல் கிராமங்களில் தினம் தவறாமல் மஞ்சள் நிறத்தில் சாணம் தெளித்து அதில் அழகாக வெள்ளை மாவினால் கோலம் போடுவதென்பது பூமிக்கு செய்யும் பூஜையே ஆகும். இதையே நம் முன்னோர்கள் அரிசி மாவினால் போட்டு எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு உணவாக அளித்தனர்.
இன்னும் மார்கழி மாதம் வந்து விட்டால் கோலப்பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். பரங்கி பூவென்ன? அதை பெரிய பெரிய கோலங்களில் அங்கங்கே சின்னச் சின்ன சாண உருண்டைகளின் மேல் வைப்பதென்ன? கலர் பொடிகளை கொண்டு ரங்கோலி போடுவதென்ன? அதில் போட்டிகள் என்ன? புள்ளிக் கோலம் என்ன? அதில் நேர்ப் புள்ளி, இடுக்குப் புள்ளி என்று பல வகைகள் என்ன? புள்ளியை சுற்றி போடும் கோலம், புள்ளி மேல் போடும் கோலம். ஆஹா! பெண்களுக்குத்தான் எத்தனை விதமான உற்சாகமான பொழுது போக்குகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன?
இந்த போழுதுபோக்குகளே பெண்களுக்கு தேவையான உடற்பயிற்சியை யும் கொடுத்து விடுகிறதுஇதெல்லாம் இப்போது கிராமங்களில் மட்டுமே பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது. இக்கால அப்பார்ட்மென்ட் கலாச்சாரத்தில் இதற்கெல்லாம் எங்கே இடம்? ஏது நேரம்? ஆனாலும் நம் பெண்கள் வீடுகளின் உள்ளே சுவாமி படம் வைத்து பூஜைசெய்யும் இடங்களை சுத்த மாக துடைத்து சின்னதாக இருந்தாலும் பளிச்சென்று கோலம் போடுகிறார்கள் என்பது ஆறுதலான விஷயம்.
-ராஜி ரகுநாதன்