குரானையோ நபிகள் நாயகத்தையோ அவமதிக்கிறவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒரு சட்டம் போடச்சொல்லி நவம்பர் 21 அன்று பாரதத் தலைநகர் டெல்லியில் கூடிய ’அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்’ என்ற அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இது ஆபத்து.
அதைவிட அந்த அமைப்பு, ”இப்படி ஒரு சட்டம் பாகிஸ்தானில் உள்ளது. அதே சட்டம் இங்கேயும் வேண்டும்” என்று கேட்பது பேராபத்து.
சென்ற வாரம் பாகிஸ்தானின் வீதியில் இலங்கை நபர் ஒருவரை உயிரோடு எரித்து கொலை செய்திருக்கிறது ஒரு மதவெறி கூட்டம். அவர் நபிகள் நாயகத்தையும் குரானையும் இழிவுபடுத்தி பேசினாராம், இவர்கள் எரிப்பார்களாம். இந்த நிலையில் மத இழிவுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் கேட்டு பாரத மண்ணில் ஓர் அமைப்பு தீர்மானம் போடுகிறது என்றால்…!
ஹிந்து கடவுளரையும் ஹிந்து புனித நூல்களையும் இழிவு படுத்துகின்றவருக்கு இது போல ஒரு தண்டனை அளிக்க வேண்டும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. அப்படியே ஒரு சட்டம் வந்துவிட்டால் என்ன ஆகும், குறிப்பாக தமிழகத்தில்? கற்பனை செய்து பார்ப்போம்.
தமிழக பொது வாழ்க்கையில் ஹிந்து சமய விரோத அட்டூழியம் செய்து வருகிறவர்கள் கூண்டோடு மரண தண்டனைக் கைதிகள் ஆகி கம்பி எண்ணுவார்கள். தம்பிகளே, கேட்பதற்கே அருவெறுப்பாக இருக்கிறது அல்லவா?
அதனால் முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அந்த தீர்மானம் நாட்டின் எந்த பகுதியில் கண்டனத்திற்கு உள்ளாகிறதோ இல்லையோ, கண்டனத்தை முன்னெடுத்துச் செல்ல தமிழகத்திற்கு முக்கியமான கடமை உள்ளது.
எந்த ஒரு சம்பவத்திலும் மதம் பார்த்து வாய் திறப்பது அல்லது வாயை அடைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சில தமிழக அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ’மத இழிவுக்கு மரண தண்டனை’ சட்ட கோரிக்கையை கண்டனம் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். கோரிக்கை வைப்பது ’அன்பு மதம்’ ஆயிற்றே!
குறிப்பாக, எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்ற தேச நலன் சார்ந்த கோரிக்கை எழுப்பப் படும்போது எகிறி எகிறிக் குதிக்கிற செக்குலர் கும்பல், ’மத இழிவுக்கு மரண தண்டனை’ சட்டம் கேட்பதை கேட்காதது போல் இருந்துவிட்டால் இனி தப்ப முடியாது; தங்கள் கடையைக் கட்ட வேண்டியதுதான்.