சீக்கியர்களின் தலைமை மதபீடமான ‘தி ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி’ (எஸ்.ஜி.பி.சி.) அண்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தங்களுடைய மத விவகாரங்களில் தலையிட்டு சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று அத்தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது ‘அகாலிதள’ அரசியல் விளையாட்டின் ஒரு பக்கமாகும். சீக்கியர்களின் தலைமை மத பீடமான எஸ்.ஜி.பி.சி., அகாலிதளத்தின் முழு கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.எஸ்.ஜி.பி.சி.க்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தல் நடைபெற்றபோது பஞ்சாபில் அகாலிதளம் ஆட்சியில் இருந்ததால், அவர்கள் ஆதரவாளர்கள் அதில் வெற்றிபெற்று தற்போதுவரை நிர்வாகத்தில் இருந்து வருகின்றனர். மாநிலத்தில் காங்கிரஸ் கை ஓங்கி இருக்கும் போது அவர்கள் வசமே எஸ்.ஜி.பி.சி.யின் கட்டுப்பாடு இருந்து வந்துள்ளது. தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்மை சட்டங்களால், காங்கிரஸ் மற்றும் அகாலிதள அரசியல் வாதிகள் பலரின் வருமானத்திற்கு வழியில்லாமல் போய்விட்டது. இதை உணர்ந்த அவர்கள் எதையெதையோ செய்து நாட்டில் ஒரு பதற்றத்தை உருவாக்கி வன்முறை நடந்து, பல உயிர்களை பலியாக வைத்து அரசியல் செய்திட முயற்சி மேற்கொண்டனர். அம்முயற்சிகள் அனைத்தும் மக்கள் ஆதரவின்றி முடங்கிப் போயின.
எனவே, அடுத்து ஆர்.எஸ்.எஸ். மீது பழி சுமத்தத் துவங்கியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு மதக்கருத்தையும் எவர்மீதும் திணிக்க முயற்சி மேற்கொண்டதில்லை என்பதை பாரத நாட்டில் தோன்றிய மதங்களைப் பின்பற்றுபவர்களும் அதன் மதத் தலைமையும் நன்கு அறிவர். அதனால் தான் பல்வேறு சம்பிரதாயங்களைப் பின்பற்றிவரும் மக்களும் அதனதன் தலைவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு தங்களது முழு ஓத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
ஹிந்துக்களின் வாளேந்திய வலது கரம் சீக்கியர்கள். ஹிந்து தர்மம், ஹிந்து பண்பாடு காத்திட துணிவுடன் போராடி இன்னல்கள் பலவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு தங்களையே பலிதானமாகத் தந்த ஒரு வீர பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சீக்கியர்கள். உருவ வழிபாடு, அருவ வழிபாடு இரண்டையும் ஏற்றுக்கொண்டு அனுமதித்துள்ளது ஹிந்து சனாதன தர்மம். புனித நூலான ‘குருக்ரந்த சாஹிப்’பையே சீக்கியர்கள் வழிபட்டு வருகின்றனர். அதில் ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீதுர்கா போன்ற பெயர்களே நூற்றுக்கணக்கில் இடம்பெற்றுள்ளன.
ஹிந்து தர்மத்தையும் ஹிந்துக்களையும் காத்திட வேண்டி போராடிய குரு தேஹ்பகதூர், குரு கோவிந்தசிம்ஹன் அவருடைய புதல்வர்கள் செய்த அரும் தியாகத்தை மறந்திட முடியுமா? அவ்வாறு மறந்தவர்களை நடைப்பிணம் என்றே அழைக்கலாம். நகமும் சதையைப் போலவே ஹிந்துக்களும் சீக்கியர்களும் பிரித்துப்பார்க்க இயலாதவாறு வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தினரிடையே திருமணம் இயல்பாக நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தில் இரு பிரிவினரையும் காண முடியும். ஹிந்துக்கள் குருத்வாராக்களுக்கும் சீக்கியர்கள் ஹிந்து ஆலயங்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி சென்று வருகின்றனர்.
புனித க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் குருநானக் துவங்கி பலரும் சென்று வந்துள்ளனர். அங்கெல்லாம் யாத்ரீகர்கள் தங்கிச் செல்வதற்காக தர்மசாலைகளை அமைத்துள்ளனர். புனித தீர்த்தக்ஷேத்ரமான ராமேஸ்வரத்திற்கு ஸ்ரீ குருநானக் வந்துள்ளார். பண்டிகைகள் திருவிழாக்கள் அனைத்தும் பொதுவானதாகவே இரு பிரிவினருக்கும் இருந்து வருகிறது.
ஆரிய திராவிட இனம் என்ற நச்சுவிதையை தமிழகத்தில் விதைத்ததைப் போன்று ஆங்கிலேயர்களால் விதைக்கப்பட்டது, ஹிந்துக்க ளும், சீக்கியர்களும் வெவ்வேறு இனத்தவர் என்கிற கட்டுக்கதை. எப்படி தமிழையே முறைப்படி கற்றறியாத பாதிரிகள், தப்பும் தவறுமாய் தமிழ் நூல்களுக்கு விளக்கம் அளித்துள்ளனரோ, அதைப்போன்றே ‘ஸ்ரீ குருக்ரந்த சாஹிப்’ புனிதநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் பெயர்கள் வருமிடங்களில் எல்லாம் God என்று பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர்கள் விரித்த அந்த சதிவலையில் சீக்கியர்கள் சிலரும் வீழ்ந்துள்ளனர். அவர்கள்தான் இன்று சீக்கியர்களிடையே ஹிந்துக்களுக்கு எதிராக அதிலும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காலிஸ்தான் தனிநாடு கேட்டு ஆங்கிலேய அடிவருடிகள் சிலர் செய்த பிரிவினைவாத பயங்கரவாத நடவடிக்கையில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகினர். பாரதப் பிரதமராக பதவியில் இருந்தபோதே இந்திரா காந்தி இதற்காக பலியானார். காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளை எதிர்த்து நின்று துணிச்சலுடன் செயல்பட்டு வந்த அப்போதைய பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங், படுகொலை செய்யப்பட்டதை எப்படி நம்மால் மறக்க முடியும்? எண்ணற்ற ராணுவ வீரர்கள், காவல் துறையினர், அப்பாவி பொதுமக்கள் பலர் இந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் தேசவிரோத செயல்களுக்கு பலியாகியுள்ளனர் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
சீக்கியர்கள் அனைவரும் காலிஸ்தானிகள் கிடையாது; காலிஸ்தானிகளை ஆதரிப்பவர்களுமில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள சீக்கியர்களே காலிஸ்தான் ஆதரவாளர்கள். கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குடியேறியுள்ள சீக்கியர்கள் சிலர் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. பின்பலத்துடன் காலிஸ்தான் பிரிவினைவாத செயல்களுக்கு துணை போகியுள்ளனர். 1980களின் துவக்கத்தில் தனி காலிஸ்தான் கோரிக்கை கொழுந்துவிட்டு எரியத்துவங்கி பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் குடித்து பின்னர் கே.பி.எஸ்.கில் என்ற துணிச்சல் மிக்க காவல்துறை அதிகாரி மேற்கொண்ட நடவடிக்கையினால் 1995ல் பஞ்சாபில் அமைதி திரும்பியது.
இந்த 15 வருட போராட்ட காலத்தில் 21,532 பேர் மொத்தமாக பலியாகியுள்ளனர். இதில் 11,696 பேர் சாதாரண பொதுமக்கள் ஆவர். 8,090 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். 1,746 காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினரும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இறந்துபோன பொதுமக்களில் சீக்கியர்களே பெரும்பான்மையினர். இந்தத் தவறிலிருந்து அகாலிதளத்தினரோ காங்கிரஸ் கட்சியினரோ எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. பிரிவினைவாத காலிஸ்தானிகளுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் இடையே அரணாக நின்று வேலை செய்த அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே. எந்தவொரு அச்சுறுத் தல்களையும் படுகொலைகளைக் கண்டு அஞ்சாமல் ஹிந்து சீக்கிய ஒற்றுமைக்கு அயராது பாடுபட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். மட்டுமேயாகும். காங்கிரஸ் கட்சிக்கும் அகாலி தளத்திற்கும் இடையே நடைபெற்று வந்த அரசியல் அதிகார மோதலில் பிரிவினைவாதி பிந்தரன் வாலேவை போட்டி போட்டுக் கொண்டு இருதரப்பினரும் ஆதரித்தனர்.
1967ம் வருடம் அகாலிதளம் முதல் தடவையாக பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தனர். இந்திரா காந்தி மத்தியில் பதவியில் இருந்து வந்தபோது பஞ்சாப் அகாலிதள ஆட்சிக்கு கடுமையான தொந்தரவுகளை அளித்துக் கொண்டே இருந்தார். 1972ல் அகாலிதள ஆட்சியை கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் தலைமை கியானி ஜெயில்சிங் அவர்களை முதல்வராக்கியது. கியானி ஜெயில்சிங் நல்லாட்சி நடத்துவதை விட்டுவிட்டு எப்படியாவது அகாலி தளத்தின் செல்வாக்கை குறைத்திட வேண்டும் என்பதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.
அந்த நேரத்தில் பிந்தரன் வாலேயின் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு அகாலிதளம் மறைமுகமாக ஆதரவு தரத் துவங்கியது. 1973ல் சீக்கியர்களுக்கென தனியொருதேசம் என்ற அனந்தபூர் சாஹிப் தீர்மானத்தை கையில் எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தியது. மத்தியில் 1977ல் ஜனதா அரசு பதவிக்கு வந்த பிறகுதான் அந்தப் பிரிவினைவாத ஆயுதத்தை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டது. அதன்பிறகு மாநிலத் தில் தொடர்ந்து 40 வருடங்களுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது.
1966ல் பஞ்சாப் தனி மாநிலமாக உருவெடுத்தது. அன்றிலிருந்து இன்றுவரை அம்மாநிலத்தில் சீக்கியர்களே தொடர்ந்து மாநில முதல்வர்களாக பதவி வகித்து வருகின்றனர். ஆனால் அம்மாநிலத்தில் சுமார் 30 சதவீதத்திற்கும் மேல் ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர். ஹிந்து – சீக்கிய ஒற்றுமை இயற்கையானது. அதைப் பிரித்திட முயற்சிக்கும் வேலைக்கு பெரும் இடையூறாக ஆர்.எஸ்.எஸ். இருந்து வருகிறது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள அகாலி தளத்தினரும் எஸ்.ஜி.பி.சி. தலைமையும் அனாவசியமாக ஆர்.எஸ்.எஸ்ஸை வீண் வம்புக்கு இழுக்கிறது.
ஹிந்து சீக்கிய ஒற்றுமைக்காக ஆர்.எஸ்.எஸ். ஏராளமான இழப்புகளை சந்தித்துள்ளது. பஞ்சாபில் பயங்கரவாதம் தலையெடுத்து ஆடிய நேரத்தில் நாடு எங்கிலும் இருந்து எண்ணற்ற பிரச்சாரகர்களை (முழு நேர சேவகர்கள்) பஞ்சாபிற்கு அனுப்பி மக்களுக்கு தன்னம்பிக்கையை விதைத்தது. அப்போது நம் தமிழகத்தில் இருந்தும் நன்கு அனுபவமும் ஆற்றலும் கொண்ட 2 பிரச்சாரகர்களை நாம் பஞ்சாபிற்கு அனுப்பிவைத்தோம். அவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வேலைசெய்தனர் என்பதை பெருமையுடன் சொல்லமுடியும். எனவே, எஸ்.ஜி.பி.சி.யின் இத்தீர்மானம் பொருளற்றது.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காக இயற்றப்பட்டது என்பதைவிட வேறு எந்த முக்கியத்துவமும் அதில் இல்லை. நாடெங்கிலும் சங்கத்திலும், பா.ஜ.க.விலும் மற்றுமுள்ள பல்வேறு சங்க குடும்ப இயக்கங்களிலும் ஏராளமான சீக்கிய சகோதரர்கள் மன நிறைவுடன் பங்கேற்று வேலைசெய்து வருகின்றனர்.