மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், யமுனோத்ரி, கங்கோத்ரி, பத்ரிநாத் உட்பட ‘சார் தாம்’ என குறிப்பிடப்படும் நான்கு புராதன யாத்திரை தலங்களில் ஒன்று. கேதார்நாத் கோயில், குளிர் காலத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி ஆறு மாதங்களுக்கு இக்கோயில் மூடப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க நேற்று கோயில் திறக்கப்பட்டது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது மனைவி கீதா தாமியுடன் கேதார்நாத் கோயிலில் வழிபாடு செய்தார். கோயில் 15 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள், வருடாந்திர சார்தாம் யாத்திரை முன்னிட்டு மே 3 அன்று அட்சய திரிதியை நாளில் தொடங்கியது. பத்ரிநாத் கோயில் மே 8ம் தேதி திறக்கப்படவுள்ளது. சார் தாம் யாத்திரைக்கு செல்லும் யாத்ரிகர்களின் எண்ணிக்கைக்கு மாநில அரசு, சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பத்ரிநாத்தில் தினமும் 15,000, கேதார்நாத்தில் 12,000, கங்கோத்ரியில் 7,000, யமுனோத்ரியில் 4,000 யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள், 45 நாட்களுக்கு இந்த ஏற்பாடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, யாத்ரிகர்கள் கொரோனா எதிர்மறையான சோதனை அறிக்கை அல்லது தடுப்பூசி சான்றிதழை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை.