ஸ்டார்ட் அப்புக்கு உதவும் கர்நாடகா

பாரதத்திலேயே மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நகரம் என்றால் அது பெங்களூர் தான். அங்குள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு உதவி செய்வதற்காக கர்நாடக அரசு ஒரு முக்கிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கர்நாடகா அரசின் ‘கர்நாடகா டிஜிட்டல் எகனாமி மிஷன்’ (KDEM) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) இணைந்து ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் முதல்படியாக எஸ்.பி.ஐ வங்கி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்காக ‘எஸ்.பி.ஐ ஸ்டார்ட் அப் ஹப்’ என்ற பாரதத்திலேயே முதல் பிரத்தியேக கிளையை பெங்களூருவில் அடுத்த மாதம் திறக்க உள்ளது. இந்த கிளை மூலம் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வங்கி வசதிகள், நிதியுதவி, கடன் வசதிகளை எஸ்.பி.ஐ அளிக்கும். ஸ்டார்ட் அப் தொழில்முனைவோருக்கு ரூ. 2 கோடி பிணையில்லா நிதி உதவி வழங்கப்படும். ‘கர்நாடக அரசின் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தில் ஸ்டார்ட் அப் சூழலை மேம்படுத்தும். அடுத்த ஆறு மாதங்களில் மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி தர்வாட் கிளஸ்டர்களில் இதேபோன்ற கிளைகளை எஸ்.பி.ஐ தொடங்கும். கர்நாடக டிஜிட்டல் எகனாமி மிஷன் (KDEM) நவீன தொழில்நுட்ப நிதிசேவைகளை வழங்கும் ஃபின்டெக் துறைகளில் கவனம் செலுத்த மங்களூருவில் ‘ஃபின்டெக் இன்னோவேஷன் ஹப்’ அமைப்பை நிறுவும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தப் ஃபின்டெக் இன்னோவேஷன் ஹைப் துறையில் உதவி வழங்குவதற்கும் பங்குதாரர்களில் ஒன்றாக இருக்கவும் ஒப்புக்கொண்டுள்ளது’ என்று மாநில அமைச்சர் டாக்டர் சி என் அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.