காங்கிரசை தள்ளிவைத்த கபில் சிபல்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் வெளியேறியுள்ளார். மேலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் மாநிலங்கள் அவை தேர்தலில் உ.பி. மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் முழுமையான மாற்றம் தேவை என்பது அதில் உள்ள பல சீனியர் தலைவர்களின் கருத்து. இது தொடர்பாக காங்கிரசை சேர்ந்த 23 மூத்த தலைவர்கள் தலைமைக்கு கடிதமும் அனுப்பி இருந்தனர். இவர்கள் ‘ஜி 23’ குழு என அழைக்கப்பட்டனர். அந்த அதிருப்தி குழுவில் ஒருவராக இருந்தவர் கபில் சிபல். அதிருப்தி குழுவுக்கு தலைமை தாங்கியவரான குலாம் நபி ஆசாத் கூட, சோனியா தலைமை தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியபோதுகூட, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி குடும்பம் விட்டுக் கொடுக்க வேண்டும்; சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவரே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் கபில் சிபல். இந்நிலையில் நேற்று திடீரென உ.பி. மாநிலம் லக்னோவில் சட்டசபை வளாகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார் கபில் சிபல். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் இருந்து மே 16ம் தேதியே பதவி விலகிவிட்டேன். தற்போது சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எனக்கு ஆதரவு அளிக்கும் என்றார். கபில் சிபலின் இந்த முடிவானது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.