கொடூரமான ரௌலட் சட்டம்
முதல் உலகப்போர் 1916- – 17 நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் பிரிட்டன் பல வகைகளில் பாதிக்கப்பட்டது. தனது பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க தன் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளைச் சுரண்ட ஆராம்பித்தது. பாரத மக்கள்மீது தாங்க முடியாத வரிச்சுமையைச் சுமத்தியது. இதை எதிர்த்து பாரதத்தில் கிளர்ச்சியும் வரி கொடா இயக்கமும் துவங்கியது. போராட்டத்தை நசுக்குவதற்காக அரசு ரௌலட் சட்டம் கொண்டுவந்தது.
பாரத மக்களின் பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் சுதந்திரம், ஊர்வலம் செல்லும் சுதந்திரம், ஆகியவற்றை அச்சட்டம் தடை செய்தது. காரணம் காட்டாமல் எவரையும் கைதுசெய்யலாம், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம், உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் உரிமை கிடையாது என பலக் கொடுமைகளை உள்ளடக்கியதுதான் ரௌலட் சட்டம்.ரத்த வெள்ளத்தில் ஜாலியன் வாலாபாக் ஏப்ரல் 13, 1919 அன்று புத்தாண்டுத் திருநாள். பஞ்சாபில் ‘வைசாகி தினம்’ என அழைக்கப்படும் இந்நாளை அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடுகிறார்கள். சீக்கிய மத குரு கோவிந்தசிங் உருவாக்கிய ‘கால்ஸா’ தினமும் அன்று கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அமிர்தசரஸ் கோயிலுக்கு வருகை தந்தார்கள். அன்று மாலை கோயிலுக்கு அருகில் உள்ள ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. பொதுக் கூட்டத்திற்கு அரசு தடை விதித்தது.
அதையும்மீறி ஆயிரக்கணக்கான மக்கள் மைதானத்தில் குவிந்தார்கள். மைதானம் நான்குபுறமும் மதில் சுவர்களும் ஒரே ஒரு வாயிலோடும் அமைந்திருந்தது. மைதானத்தில் 20,000 பேர் இருந்தார்கள். பேச்சாளர்கள் ரௌலட் சட்டத்தை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஜெனரல் டயர் 90 ராணுவ வீரர்களோடு வந்தான். மைதானத்தின் இருந்த ஒரே வாயிலின் இரண்டு பக்கமும் வீரர்களை நிறுத்தி சுடுவதற்கு உத்தரவிட்டான். இரண்டு பீரங்கிகள், 90 வீரர்களின் துப்பாக்கி தோட்டாக்கள், 1,650 ரவுண்டுகள் சுட்டுவிட்டு நிறுத்தினான். காரணம், அதற்குமேல் துப்பாக்கிகளில் தோட்டாக்கள் இல்லை.
உதம் சிங்கின் சபதம்
ஜாலியன் வாலாபாக் மைதானம் முழுவதும் திரும்பிய இடமெல்லாம் பிணக்குவியல்கள். கை இழந்து, கால் இழந்து உயிருக்குப் பலர் போராடிக் கொண்டிருந்தனர். அந்த மைதானத்தின் ஓர் ஓரத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து தப்புவதற்காக பலர் கிணற்றில் குதித்தனர். ஒருவர்மீது ஒருவர் கிணற்றில் குதித்ததால் கிணற்றில் மட்டும் சுமார் 150 பேர் இறந்து கிடந்தனர். ஜாலியன் வாலாபாக் மைதானம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. ஆயிரக் கணக்கானோர் பிணமானார்கள். ஆனால், அராஜக அரசு 359 பேர்தான் இறந்தார்கள் என்று பொய் கூறியது. மாலையில் இந்தக் காட்சியை கண்ணால் பார்த்த 19 வயதே ஆன உதம் சிங் அங்கிருந்த இரத்தம் சிந்திய மண்ணை எடுத்து நெற்றியில் திலகமாகப் பூசி, இந்தப் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயர், பஞ்சாப் மாநில ஆளுநர் மைக்கேல்ஓ டயர் ஆகியோரைக் கொன்று பழிக்குப் பழி வாங்குவேன் என்று சபதமேற்றான்.
லண்டன் பயணம்
உதம்சிங் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்து ஓர் அநாதை விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். ஜாலியன் வாலாபாக்கில், தான் ஏற்றுக் கொண்ட சபதத்திற்காகத் திட்டமிடத் துவங்கினான். ஜெனரல் டயரும், மைக்கேல் ஓ டயரும் லண்டனுக்குச் சென்றுவிட்டார்கள். அங்கேயே சென்று அவர்களைப் பழிவாங்க முடிவெடுத்தான். அதற்காக பஞ்சாபிலிருந்து எங்கெங்கோ சென்று கடைசியில் லண்டன் சென்று, மூவர் தங்கியிருந்த இடங்களைக் கண்டுபிடித்தான். மூவரையும் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்வதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். பசி, பட்டினி கிடந்து சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஒரு துப்பாக்கி வாங்கினான். மாதங்கள், ஆண்டுகள் என்று காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. இதற்கிடையில் ஜெனரல் டயர் பக்கவாத நோயால் இறந்து விட்டான். தன் கையால் சாக வேண்டியவன் இயற்கையால் இறந்து விட்டானே என்று கவலைப் பட்டான். அடுத்து மைக்கேல் ஓ டயரையும் சுட்டுத் தள்ள தீவிரமானான்.
சபதம் நிறைவேறியது
லண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் மைக்கேல் ஓ டயரும், மந்திரியாக இருந்த லார்டு ஷெட்லாண்டும் பேச இருக்கிறார்கள் என்று பத்திரிகையில் செய்தி வந்தது. உதம்சிங் தனது துப்பாக்கியை புத்தகம் ஒன்றில் மறைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குச் சென்றான். இங்கே தான் 30 ஆண்டுகளுக்கு முன்பு வங்கப் பிரிவினைக்குக் காரணமான சர் கர்ஸன் வில்லியை மதன்லால் திங்கரா சுட்டுக் கொன்றார். அதே ஹால். கூட்ட நிறைவில் உதம் சிங் திடீரென்று மேடை ஏறி மைக்கேல் ஓ டயரைச் சுட்டுக் கொன்றான். மைக்கேல் ஓ டயர் அந்த இடத்திலேயே பிணமானான்.
தூக்குத் தண்டனை
உதம் சிங் நினைத்திருந்தால் தப்பி இருக்கலாம். தான் 19 வயதில் ஏற்ற சபதத்தை 21 ஆண்டுகள் கழித்து நிறைவேற்றினான். உதம் சிங் கைதாகி விசாரணை நடைபெற்று அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1940, ஜூலை 31ம் தேதி பெண்டோன் வில்லி சிறையில் உதம்சிங் தூக்கிடப்பட்டான். பாரதம் சுதந்திரம் பெற்று 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரா பிரதமராக இருந்தபோது 1971ம் ஆண்டு உதம்சிங்கின் அஸ்தி லண்டனிலிருந்து பாரதத்திற்குக் கொண்டு வரப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஞ்ச நதிகளுள் கரைக்கப்பட்டது.