ஜல் ஜீவன் திட்ட முறைகேடுகள்

நாடு முழுதும் உள்ள மக்கள் பயன்பெறும் விதத்தில் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ என்ற அற்புதமான திட்டத்தை மத்திய அரசு 2019ல் கொண்டு வந்தது. இத்திட்டத்திற்கு மாநில அரசுகளுடன் இணைந்து 3.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில், 100 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய மாநிலங்களாக கோவா, தெலங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் டாமன் டையு, குஜராத் ஆகியவை சாதனை படைத்தன. ஆனால், தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தில் முறையாக செயல்படுத்தபடவில்லை, போலி ரசீதுகள் தயாரித்து பணம் கேட்கின்றனர், முறைகேடுகள் நடைபெறுகின்றன என பல குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த ஒருவர், விடியல் அரசு அமைத்துள்ள ஜல் ஜீவன் குடிநீர் இணைப்பு குழாய்களை கைகளில் எடுத்து காண்பிக்கிறார். அதில் தரையில் எந்த குடிநீர் குழாயும் பதிக்கப்படாமல், இணைப்புகள் ஏதும் கொடுக்கப்படாமல், வெறும் ஒரு சிறிய சிமெண்ட் தூணும் அதில் உள்ள 2 அடி நீள பிளாஸ்டிக் குழாயும் அரை அடி தூரம் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான். அந்த ஒரு நபரது வீடு மட்டுமல்ல, அங்குள்ள அனைத்து வீடுகளிலும் இதேநிலை தான் நிலவுகிறது. இதற்கு திட்ட மதிப்பீடு ரூ. 3 லட்சத்து 69 ஆயிரம் என கூறப்படுகிறது. எந்த இணைப்பும் இல்லாத இந்த குழாயில் எப்படி தண்ணீர் வரும்? இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.