– அகிலா கார்த்திகேயன்
உண்மையை சொல்லப்போனால் என் பால்ய வயதில் குலதெய்வம் என்றால் அப்போது எங்கள் ஊர் ராஜா தியேட்டரில் நான் பார்த்த குலதெய்வம் என்ற குடும்ப சித்திரம் என்றுதான் என் சிற்றறிவுக்கு எட்டியிருந்தது. எல்லா குடும்பங்களுக்கும் ஸ்பெஷலாக இப்படி ஒரு தெய்வம் அவரவர்களின் கிராமத்தில் அம்போவென விட்டுவிட்டு வரப்பட்டிருக்கிறாறென்பது பின்புதான் தெரிந்தது . “எங்க பூர்வீகம் வேதாரண்யம் பக்கத்தில் அகத்தியான்பள்ளி ” என்று என் தந்தை எப்போதாவது மற்றவர்களிடம் கூறுவதுண்டு. இந்த வேதாரண்யமே எந்த பக்கத்தில் இருக்கிறதென்று தெரியாத எனக்கு அதன் பக்கத்தில் இருக்கும் அகத்தியான்பள்ளியையோ அங்கே அருள்பாலிக்கும் எங்கள் குலதெய்வத்தையோ தெரிந்திருக்க நியாயமில்லை.
எனக்கு அந்த குலதெய்வத்தை அப்பா ‘இன்டர்ட்டியூஸ்’ செய்தபோது நான் அந்த கால ‘இன்டர்மீடியட்’ஐ பாஸ் செய்த வயதில் இருந்தேன். என் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு எத்தனை கட்டாயப்படுத்தி இன்வைட் பண்ணினாலும் அந்த கிராமத்தைவிட்டு அசைந்து வரப்போவதில்லை என்று தெரிந்தும் முதல் பத்திரிகையை அங்க குலதெய்வம் ஐயனாருக்கு வைத்துவிட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதற்கான முதல் காரியமாய் ஒரு போஸ்ட் கார்டை எடுத்து என் தந்தை எழுதச் சொன்னார். அவர் சொல்படி நான் மேற்படி எங்கள் கிராமத்திலிருந்த கிச்சாமி என்பவருக்கு எழுதினேன்.
“அன்புள்ள கிச்சாமிக்கு,
ராமசாமியின் மகன் சுப்புணி எழுதுவது. நீ எப்படி இருக்கே. நான் ஊரைவிட்டு வரும்போது உனக்கு ஒற்றை தலைவலியாய் இருந்ததே… இப்போது தேவலாமா? அப்பா அந்த நாளில் ஆயுஷ்ய ஹோமம் முடிந்த உன் பெண் இப்போது கல்யாண வயதில் இருப்பாளே? ஏதாவது வரன் அமைந்ததா? இங்கு எங்களுக்கு எப்போதும் உங்களைப் பற்றிதான் கவலை.. நிற்க” என்று இஷ்டத்துக்கும் அளந்துவிட்டு அவரை மெய்யாலுமே ஸ்தம்பித்து நிற்க வைத்த பின் காரியவாதியாக நாங்கள் அங்கே இன்விடேஷன் கொடுக்க வரப்போவதாகவும், அப்படியே ஐயனாருக்கும் ஆராதனை அபிஷேகம் செய்யவிருப்பதால் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லியும் எழுதச் சொன்னார். அந்த கால்கடுதாசியில் கண்டவைகளே எத்தனை காலம் கடந்து எங்கள் குடும்பத்திற்கு குலதெய்வத்தின் நினைவு வந்துள்ளதென்பதை அறிவிப்பதாய் அமைந்தது.
ஆனால் அத்தனை காலம் கடந்திருந்தாலும் அந்த ஐயனார் கோயிலை சீராட்ட ஆளில்லாமல் அப்பா அப்போது பார்த்ததைவிட இன்னும் சிதலமடைந்துள்ளதாக அவர் சொன்னதிலிருந்து தெரிந்தது. அந்த பழுதுபட்ட பத்தடிக்கு பத்தடி கருவறை இருட்டில் நான் அவரை தேடிக் கொண்டிருந்தபோது “இவர்தான்டா நம்ப குலதெய்வம்” என்று அப்பா அறிமுகப்படுத்தினார். “என்ன இப்பத்தான் ஊருக்கு வர வழி தெரிஞ்சுதா?” என்று அந்த இருளிலிருந்து ஒரு பலகீனமான குரல் கேட்டதும் ஐயனார்தான் மிகவும் வருத்தப்பட்டு கேட்கிறாரோ என்று என் தந்தை சற்றே ஆடிப் போனார்.)
“டேய்! சுப்புணி நான்தான்டா… இங்கே பாரு” என்று அந்த ஒல்லியான உருவம் பல்லியாக கோயில் சுவற்றில் ஒட்டி நின்று பேசியது தெரிந்தது. அப்படி ஒட்டி நிற்கும் ஆசாமிதான் மற்ற எல்லா குடும்பங்களும் கிராமத்தை விட்டு வெட்டிக் ரெண்டு போனபின்பும் அங்கேயே குலதெய்வத்திற்கு துணையாக இருக்கும் ஜீவனான கிச்சாமி மாமா என்று தெரிந்தது. “அடடா! கிச்சாமியா எப்படி இருக்கே?” என்று அப்பா கேட்க “ஏதோ இந்த ஐயனாரும் நானுமா ஒருத்தர் ஒருத்தர் முகத்தைப் பார்த்துண்டு உட்கார்ந்திருக்கோம்” என்று அவர் விரக்தியில் பேசியபோது கருவறையிலிருந்து ஒரு பல்லி ஐயனார் சார்பாக அதை அமோதிப்பது போல் சவுண்டு எழுப்பியது.
கிச்சாமி மாமா சகல ஏற்பாடுகளையும் செய்திருக்க அடுத்தநாள் ஐயனார் பூஜை முடிந்தது. பத்து பதினைந்து வருடத்திற்கு பின் வருகிறோமே என்ற குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஏதோ ஐயனார் முன் உட்கார்ந்திருந்த அந்த இரண்டு மணி நேரமே அதை ஈடுசெய்துவிட்டது போல அப்பா திருப்திப்பட்டுக் கொண்டார். ஐயனாருக்கு திருப்தியா பண்ணியாச்சி என்று அப்பா குருக்களிடமும் கிச்சாமியிடம் சொன்னது எனக்கே எரிச்சலூட்டியதால் கதவடைக்கப்பட்ட கருவறை உள்ளிருந்த கடவுளையும் எரிச்சலூட்டி இருக்கும். எங்கள் குலதெய்வத்தின் இதே கதியில்தான் மற்ற பல குலதெய்வங்களின் கதியுமாக இருக்கக் கூடுமென்று தோன்றுகிறது.
ஒரு காலத்தில் கிராமமே கதி என்று கிடந்த குடும்பங்கள் வயிற்று பிழைப்பிற்காக நகரங்களுக்கு இடம் பெயர தொடங்கியதிலிருந்து இந்த கிராம தேவதைகளின் பிழைப்பு திண்டாட்டமாகி போய்விட்டிருந்தது. குலதெய்வங்களாக கோலோச்சிக் கொண்டிருந்தவைகள் பாத்து நாளாச்சி என்று தன் பாசக்கார பழைய குடும்பங்களை எதிர்பார்த்து ஏக்கத்துடன் உட்கார்ந்திருக்கும் நிலையானது.
அதையும் மீறி அந்த கிராமமே கதி என்று தனக்கு துணையாக எங்கும் நகராமல் இருக்கும் ஓரிரு குடும்பங்களின் தயவால் அந்த குலதெய்வங்கள் காலத்தைத் தள்ளுகின்றன. அந்த ஏழைக் குடும்பங்களின் நிதிவசதிக்கு உட்பட்டு அசடு வழியும் விளக்கொளியிலும், அரை ஆழாக்கு அன்ன நைவேத்தியத்திலும் அந்த குலதெய்வங்கள் அட்ஜெஸ்ட் செய்து வாழ பழகிவிட்டன. இப்படி நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் நிலை அவலமாய் இருக்கிறதே என்ற குற்ற உணர்வே இல்லாமல் எல்லா குடும்பங்களும் சகல சௌகர்யங்களையும் பெருக்கிக் கொண்டு இந்நாடு வெளிநாடு என பரவிக்கிடக்கின்றன.
ஆனாலும் அந்த குலதெய்வம் குணக்குன்றாய் அந்த அலட்சியத்தை பாராட்டாமல் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு நான்தான் கஸ்டோடியன் என்ற பெருமையோடு பொறுமையாக நீங்கள் எப்போதாவது வந்து எட்டி பார்க்க மாட்டீர்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. தான் என்ன குலம், தனக்கு எது குலதெய்வம் என்று கூட தெரிந்து கொள்ளாத ஆசாமிகள் பெருகியிருக்க, அந்த கிராம தேவதைகளின் பொறுமை கிராம எல்லையை மீறி பாரதம் மற்றும் கடலை தாண்டி வாழும் அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு பாடம் சொல்ல பலவித தொல்லைகளாக பாதிக்க ஆரம்பிக்கின்றன.
குலதெய்வங்களின் ஏக்க பெருமூச்சு, மூச்சுவிட தவிக்கும் ஆஸ்த்மாவாக படுத்துகிறது. பிள்ளைக்கு படிப்பு ஏறாமல் செய்கிறது. பெண்ணுக்கு வயது ஏறியும் வரன் அமையாமல் இழுத்தடிக்கிறது. இப்படி பல்வேறு இடையூறுகள் அவதிக்குள்ளாக்கும் போதுதான் அவனவன் ஹோமில் விடப்பட்டுள்ள தங்கள் தாய் தந்தை கிழங்களின் ஆலோசனையை கேட்க ஓடுகிறான். அப்படி இல்லாதவர்கள் பிரபல ஜோதிடர்களை இந்த இடர்களைய வழி கேட்கின்றனர். அனேகமாக அந்த வீட்டு முதியவர்களும் நாட்டு ஜோசியரும் கூறும் இரண்டே உபாயங்களில் ஒன்றாக இந்த குலதெய்வ குத்தமும் மற்றொன்றாக பித்ருதோஷம் என்பதாகவும் இருக்கும். அப்போதுதான் தன் குலதெய்வம் எது என்று தேடியே ஆகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படும்.
சிலருக்கு குலதெய்வத்தை தேடுவது அத்தனை சுலபமாக இராது. அதை தேடித்தர உபாயம் சொன்ன அதே ஜோசியரிடம் செல்வார்கள். அவரும் கண்டுபிடிக்க முடியாமல் ‘இது வேற டிபார்ட்மென்ட்’ என்று சொல்லி நழுவி விடுவார். சிலர் “என் கொள்ளு தாத்தாவிற்கு கள்ளிடை குறிச்சிபக்கம் எள்ளத்தூர்.. அங்கே எங்கள் குலதெய்வம் எதுவாய் இருக்கும் என அடையாளம் காட்டுபவர்களை எங்கள் குலதெய்வமாக கொண்டாடுவோம்” என்ற ரீதியில் வரிவிளம்பரங்களை கொடுத்து வரிந்து கட்டிக் கொண்டு தேடியும் வெகு காலங்களாக ‘டச்’ விட்டுப்போன அந்த உம்மாச்சி அத்தனை சுலபமாக கிடைத்துவிட மாட்டார்.
இதற்கான காரணம் அவர்களின் முன்னோர்கள் முடிந்த போதெல்லாம் குலதெய்வத்தைப் பார்க்காமல் விட்டதுதான். குழந்தைக்கு முடி இறக்கவோ, பேத்தி விசா கிடைத்து வெளிநாடு பறக்கவோ குலதெய்வத்தை வேண்டிக் கொள்ள சொல்லும் இவர்கள் “ஒரு ரூபாயை மஞ்சள் துணியில் முடிஞ்சி வைச்சிடு… முடிஞ்சபோது போய்க்கலாம்” என்று குலதெய்வம் கோயிலுக்கு போவதை மூன்று நான்கு தலைமுறையாக இந்த மஞ்சள்துணி முடிச்சாகவே முடிந்து.
அதனால் அடுத்த வாரிசுகளுக்கு குலதெய்வம் எது என்ற சஸ்பென்ஸ் முடிச்சு அவிழாமலேயே போய்விடுகிறது. நான் போயிருந்த ஒரு நிச்சயதார்த்த விழாவில் இது போன்ற ஒரு குலதெய்வ கூத்து நடந்தது. லக்ன பத்திரிகையை எழுத ஆரம்பித்த சாஸ்திரிகள் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு அதன் கீழ் அவரவர்களின் குலதெய்வங்கள் துணை என்று எழுத மாப்பிள்ளையின் தகப்பனாரிடம் அதை சொல்லும்படி கேட்டார். செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்த அவர் பேய் முழி முழித்தார்.
“குலதெய்வத்தை கூகுள்லே சர்ச் பண்ண முடிஞ்சுதுன்னா தேவலை ” என்று சாஸ்திரிகள் நக்கல் அடித்துவிட்டு “தெரியலைன்னா விடுங்கோ நீங்க ரெண்டு சம்பந்திகளும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணா ஆகப் போறீங்க….. அவாளோட குலதெய்வத்தையே உங்களுக்கும் போட்டுடறேன்…. இனிமே அவரையே அடாப்ட் பண்ணுங்கோ” என்று வெகு சுலபமாக மத மாற்றம் போல் குல தெய்வ மாற்றத்தை செய்து வைத்தார்.
இங்கே இந்திய நாட்டில் இருக்கும் குலதெய்வத்தை கண்டு கொள்ளாமல் கனடா, இங்கிலாந்து என்று கடல் கடந்து கீரின்கார்ட் வாங்கி செட்டில் ஆன சில பேர்வழிகள் அங்கேயே ஒன்று சேர்ந்து தங்கள் சௌகர்யத்திற்கு அங்கே ஓர் ஆலயம் அமைத்து குலதெய்வங்களையும் குடிபெயர்த்து கொண்டு போய் விடுகிறார்கள்.
அங்கேயே முடி இறக்குகிறேன் காது குத்துகிறேன் என்று இங்கு பரதவிக்கும் ஒரிஜினல் குலதெய்வங்களுக்கும் காதையும் குத்தி பூவையும் சுற்றி விடுகின்றனர். இதெல்லாம் ஒருபுறமிருக்க, மிக மிக சிரத்தையுடனும் பக்தியுடனும் குலதெய்வத்தை அறியும் முயற்சியோடு பலர் அரிய மகான்களை நாடி செல்வதுண்டு. (இப்படி வந்த பக்தர்களுக்கு ஸ்ரீ காஞ்சி மகாபெரியவா தன் ஞானதிருஷ்டியால் அவர்களின் குலதெய்வத்தை காட்டி அருளிய சம்பவங்கள் பல உண்டு).
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு குலதெய்வத்தை தேடிவரும் சில புண்ணியவான்களுக்கு சிதிலமடைந்த நிலையிலிருக்கும் கோயிலுக்கு தன்னாலானதை செய்யலாமென்ற மனம் வருவதில்லை . மாறாக “யார் மெய்ன்டெய்ன் பண்றா…. தரையில் காறை பேந்திருக்கே காரை நிறுத்த இடமில்லையே… குத்துவிளக்கை புளிப்போட்டு தேய்ச்சு வைச்சா என்ன” என குற்றம் குறைகளை அள்ளி வீசிவிட்டு, சல்லிகாசை அவிழ்க்காமல் அந்த குலதெய்வத்தின் மொத்த கோபத்தையும் வம்சாவளிகளுக்கு தெய்வகுத்தமாய் எடுத்து செல்வார்கள்.
ஆனாலும் அத்தனை பேரும் இத்தனை மோசமில்லை. ஊரெல்லாம் ஃபிளாட்டுகளாய் வாங்கி அவை அத்தனைக்கும் மெய்ன்டெனெஸ் சார்ஜ் என்று பல ஆயிரம் கட்டி தொலைக்கிறோமே, அதில் ஒரு பங்கு நம்மை இத்தனை வசதியோடு வாழ வைக்கும் குலதெய்வத்தின் மெய்ன்டெனெஸ்க்கும் தருவதால் குறைந்தா போய்விடுவோம் என்று நினைப்பவர்களுமுண்டு.
இப்படி நினைப்பவர்களை தேடிபிடித்து என் மகன் குலதெய்வம் ஐயனார்’ என்று ஒரு வாட்ஸ்ஆப் குரூப் உண்டாக்கிவிட்டான் அது மிகவும் ஒத்தாசையாக அமைந்தது. நாலு வருடங்களுக்கு முன் கஜா புயல் வந்து எங்கள் ஐயனார் கோயிலை புரட்டி போட்டுவிட்டது. அதை புகைப்படமெடுத்து வாட்ஸ்ஆப்பில் போட்டவுடன் புயல் வேகமாய் ஆளாளுக்கு அள்ளி தந்ததில் பல வருடங்கள் பராமுகமாக இருந்த கோயிலை புனுருதாரணம் செய்ய பல லட்சம் சேர்ந்து விட்டது.
குரூப்பில் ஒரு சீனியர் சிடிசனின் சீரிய உழைப்பால் எங்கள் ஐயனார் கோயில் சீரமைக்கப்பட்டு சீரும் சிறப்புமாக இருக்கிறது. கோயில் குருக்கள் அவ்வப்போது நடக்கும் அபிஷேக ஆராதனைகளை வாட்ஸ்ஆப் மூலம் பகிர்ந்து அனுப்பிவிடுகிறார். அதனால் எங்கள் குலதெய்வம் அப்டேட்டட் ஐயனாராக அன்றாடம் வாட்ஸ்ஆப் மூலம் காட்சி தந்து அனைத்து குடும்பங்களுக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.