தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில், 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நல்ல செய்திதான். ஆனால், தேசத்தை முன்னேற்ற, சீரிய ஜனநாயகம் தழைத்தோங்க, நல்லவர்களை நாம் தேர்ந்தெடுக்க நமக்கு தேவை 100 சதவீதம் வாக்குப்பதிவு அல்லவா? தேசம் நன்றாக இருக்க வேண்டும், நல்ல சாலை வசதி வேண்டும், தண்னீர் வேண்டும், 24 மணி நேர மின்சாரம் வேண்டும் என அனைத்தையும் எதிர்பார்க்கும் நாம், அதற்காக நமது ஜனநாயக கடமையை சரிவர செய்தால்தானே பலன் கிடைக்கும். வாக்குப் பதிவிற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வீட்டில் ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கவா அல்லது நமது கடமையை செய்யவா?
கொரோனா பயம் என சிலர் காரணம் கூறலாம். ஆனால், தேர்தல் ஆணையம், கிளவுஸ், சானிடைசர், 12 மணி நேர வாக்குப்பதிவு, அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு மையங்கள் என அதற்கேற்ற முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தது.
சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் சென்னையில் வாக்குப்பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 59.06 சதவீதமாக உள்ளது. தமிழகத்திலேயே மிகவும் குறைவான வாக்குப்பதிவு. தமிழகத்தின் தலைநகரில் இருந்துக்கொண்டு அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள், இப்படி பின்தங்கியிருப்பது என்பது, உண்மையில் சென்னைவாசிகள் வெட்கப்படவேண்டிய விஷயம். அரசு தந்த 2,500 ரூபாய் வாங்க ரேஷன் கடைகளில் கால் கடுக்க நின்ற நாம் அந்த அக்கறையில் சிறிதாவது வாக்குப்பதிவில் காட்ட வேண்டாமா?
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும், மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப வரும் காலங்களில், நோயாளிகள், சிறைவாசிகள், அனைத்து அத்தியாவசிய பணியாளர்கள் உட்பட அனைவரும் எங்கிருந்தாலும் தங்கள் தொகுதியில் வாக்குப்பதிவு செய்ய தபால் ஓட்டு, ஆன்லைன் வாக்குப்பதிவு, வாக்குப்பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் என சிந்திக்கலாம். இது வாக்குப்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.