மார்ச் 15ஐ இஸ்லாமோஃபோபியாவை (இஸ்லாம் மீதான வெறுப்பு) எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக அறிவிக்க தீர்மானம் ஒன்று ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்த விவாதத்தில் பேசிய ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, ‘உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பாகுபாடு, சகிப்புத்தன்மை, வன்முறை நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறித்து பாரதம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. உலகின் அனைத்து மதங்களுக்கும் தாயகமாக இருக்கும் பாரதம், பன்மைத்துவ மற்றும் ஜனநாயக நாடாக உள்ளது. உலகெங்கிலும் தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படுபவர்களை பாரதம் எப்போதும் அரவணைத்துள்ளது. உலக நாடுகளிலேயே பாரதத்தில் மட்டும்தான் அவர்கள் பாதுகாப்பான புகலிடத்தை பெற்றிருக்கின்றனர். எனவே, மதங்கள் மீதான சகிப்புத்தன்மையின்மை, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றை நாங்கள் ஆழ்ந்த கவலையுடன் பார்க்கிறோம். அனைத்து மத எதிர்ப்புகளையும் பாரதம் கண்டிக்கிறது. இத்தகைய பயங்கள் ஆபிரகாமிய மதங்களுக்கு மட்டும் இல்லை. உண்மையில், பல தசாப்தங்களாக இத்தகைய மதவெறிகள், உண்மையில் ஹிந்து, பௌத்த, சீக்கியம் உள்ளிட்ட மதங்களைப் பின்பற்றுபவர்களைதான் அதிகம் பாதித்துள்ளன. உலகெங்கிலும் பல ஹிந்து கோயில்கள், குருத்வாராக்கள், மடங்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பதையும் ஆபிரகாமிய மதங்கள் இல்லாத இவர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் தவறான தகவல்களைப் பரப்பப்படுவதையும் காணமுடியும். உலகில் தற்போது பரவிவரும் மதவெறியை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது. இச்சூழலில் மற்ற மதங்கள் அனைத்தையும் தவிர்த்து, ஒரு மதத்தின் மீதான வெறுப்பை மட்டுமே சர்வதேச தினம் என்ற நிலைக்கு உயர்த்துவது கவலையளிக்கிறது. இத்தீர்மானம் மற்ற அனைத்து மதங்களுக்கும் எதிரான ஃபோபியாக்களின் தீவிரத்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஐ.நா சபை ஏற்கனவே ஆகஸ்ட் 22ஐ மத அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினமாக அறிவித்தது. நவம்பர் 16 சர்வதேச சகிப்புத்தன்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இத்தீர்மானம், மதங்களை அடிப்படையாகக் கொண்ட ஃபோபியாக்கள் மீதான பல தீர்மானங்களுக்கு வழிவகுக்கும். ஐ.நா சபையை மத முகாம்களாகப் பிரிக்கும் ஒரு முன்னுதாரணத்தை அமைத்துவிடும். ஐ.நா சபை இதுபோன்ற மத விஷயங்களில் இருந்து விலகி இருப்பது அவசியம். உலக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு தளத்தில் உலகம் ஒரு குடும்பமாக கருதப்பட வேண்டும். அது பிரிவுக்கு காரணமாக இருந்துவிடக்கூடாது’ என்று கூறினார்.