ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜெர்மனிக்கு எட்டு நாள் பயணமாக சென்றிருந்தார். பின்னர் பாரதம் திரும்பினார். முன்னதாக, அவர் மிக அதிக குடிபோதையில் இருந்த காரணத்தால் லுப்தான்சா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர் நாடு திரும்ப தாமதமானது என்ற செய்தி பரவியது. இதற்கு முன்பு அவர் குடி போதையில் இருந்ததாகக்கூறி சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது. எனினும், குடிபோதை காரணமாகவே பகவந்த் மான் விமானத்தில் ஏற மறுக்கப்பட்டது என்ற கூற்றை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மல்விந்தர் சிங் காங், “எங்கள் அரசியல் எதிரிகள், முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே இந்த அவதூறுகளை பரப்பி வருகின்றனர். பஞ்சாபில் முதலீடுகளை ஈர்க்க அவர் கடுமையாக உழைப்பதை அவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. திட்டமிட்டபடி முதல்வர் திரும்பி வருகிறார்” என தெரிவித்தார். பஞ்சாப் அரசு அதிகாரிகள், அவசரகால உடல்நிலை பிரச்சனை காரணமாகவே பகவந்த் மான் ஜெர்மனியில் இருந்து விமானத்தில் ஏறத் தவறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.