சென்னையில் பதுங்கியிருந்த ஐ.எஸ்., பயங்கரவாதி கைது

கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர், சையது நபீல் அகமது, 30. இவருக்கு அமீர் என்ற பெயரும் உண்டு. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், திருச்சூர் மண்டல தலைவராக செயல்பட்டு, பயங்கரவாத செயல்களுக்கு சதி திட்டம் தீட்டி வந்தார். முஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் வாயிலாக ஆயுத பயிற்சியும் அளித்து வந்தார். இதற்கான களமாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியை தேர்வு செய்திருந்தார். அங்கு ஆயுத பயிற்சி அளித்து வந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் நிர்வாகி ஆஷிப் என்பவரை, ஜூலை 11ல், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் நிழல் போல செயல்பட்ட சையது நபீல் அகமது, 30, தப்பி விட்டார். அவர், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைமறைவாக இருந்து, சதி திட்டம் தீட்டி வருவதாக, டில்லியைச் சேர்ந்த என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சையது நபீல் அகமதுவை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர் விசாரணையில், சையது நபீல் அகமது, சென்னை பாடி பகுதியில், டி.எம்.டி., நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விடுதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அங்கு சையது நபீல் அகமது பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். அந்த விடுதிக்குள் அதிரடியாக புகுந்து, சையது நபீல் அகமதுவை கைது செய்தனர். அவரின் அறையில் இருந்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கின. மேலும், சதி வேலை விபரங்கள் குறித்த, ‘டைரி’ ஒன்றும் சிக்கியது.

அதில், கேரள மாநிலத்தில், தனக்கு கீழ் உள்ள நிர்வாகிகள், மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்த விபரங்கள் உள்ளன. அத்துடன், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பயங்கரவாத செயலில் ஈடுபடுவது என்றும், அதற்காக வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளார். மேலும், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டவும் தயாராகி வந்தார். அதுபற்றி தன் கூட்டாளிகளுக்கு, சையது நபீல் அகமது, வகுப்பு எடுத்துள்ளார். அதற்கான ஆவணங்களும் என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன.

இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தலைமறைவாக இருந்த சையது நபீல் அகமது, போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்வதில் கெட்டிக்காரர். இவர், நேபாளம் வழியாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். நாடு முழுதும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கவும், நிதி திரட்டவும், வெளிநாடுக்கு தப்பிச் செல்ல இருந்தார். அதற்குள் அவரை பிடித்து விட்டோம். தற்போது, அவரது கூட்டாளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.