சைலேந்திரபாபு கூற்று உண்மையா?

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழகத்தில் மதக்கலவரம், ஜாதி கலவரம், சாராய உயிரிழப்பு கிடையாது. ஆகவே, தமிழகம் அமைதியாக உள்ளது’ என தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில் இந்த வருடம் நிகழ்ந்த சில சம்பவங்கள் மட்டுமே அவரது கூற்று பொய் என நிரூபிக்க போதுமானதாக உள்ளது.

உதாரணமாக, கடந்த ஜனவரியில், அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா, மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஏப்ரல் மாதத்தில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் பகுதியில், ஜாதிக் கயிறு கட்டும் பிரச்சனை எனகூறி 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் ஒரு முஸ்லிம் மாணவரும் சம்பந்தப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரலில் வயலுார் முருகன் கோயிலில் அர்ச்சகர்கள் பிரச்சனையை மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் தூண்டிவிட்டது. கடந்த மே 21 அன்று புதுக்கடை பனங்கால்முக்கை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற பா.ஜ.க பிரமுகரையும் அவரது மனைவியையும் இரணியல் அருகே ஒரு மர்ம கும்பல் கடுமையாக தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது. அக்கம் பக்கத்தினர் அங்கு வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

கடந்த மே 23ம் தேதி திருநெல்வேலியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் முருகன், களக்குடி எட்டான் குளம் சாலையில் சென்றபோது மர்மமன முறையில் இறந்துள்ளார். மே 24 அன்று இரவு சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் ஒரு மர்ம கும்பலால் சாலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு சில நாட்களுக்கு முன், ‘நாகர்கோவிலில் பைக்கில் சென்ற இருவர் மீது மழை நீர் தெளித்த பிரச்னை, அமைச்சர் மனோ தங்கராஜ் தலையீட்டால் மத மோதலாக மாறி வருகிறது. சமரசம் செய்து அனுப்பிய ரதீஷின் அண்ணன், ராதாகிருஷ்ணன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். ஹிந்துக்கள் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கின்றனர். முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி கட்டாய மதமாற்றத்தால் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க எடுத்த முயற்சி  என பட்டியல் நீள்கிறது. இதைத் தவிர தமிழகத்தின் பல பகுதிகளில் சாமி சிலைம் உடைப்பு சம்பவங்கள், மாற்று மதத்தினரால் அவமதிக்கப்பட்ட கோயில்கள், குளங்கள், திருடப்பட்ட கலசங்கள் என பல குற்றச் சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் சில சம்பவங்கள் தமிழகத்தில் மதம் சார்ந்த பிரச்சனைகளும் ஜாதி சார்ந்த பிரச்சனைகளும் உள்ளதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சமீபத்திய ஒரு சில சம்பவங்கள் மட்டும் இன்னமும் முழுமையாக துப்புத் துலக்கப்படாமல் உள்ளன. முக்கியமாக இந்த சம்பவங்கள் அனைத்தும் ஹிந்து மதத்தினரை குறிவைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில், தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் அறிக்கை, ‘இது குறித்து எல்லாம் தெரியாமல் பேசுகிறாரா? அல்லது தெரிந்துகொண்டே மறைக்கிறாரா’ என்ற சந்தேகத்தைதான் தான் மக்கள் மனதில் எழுப்புகிறது.

மதிமுகன்