சென்னையில் 3 பேரிடம் விசாரணை

கோவையில் கார் குண்டுவெடிப்பு சதி சம்பவம் நடந்தது. இந்த பயங்கரவாத தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பக சென்னை, கோவை உட்பட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற குக்கர் குண்டு வெடித்தது. அதிலும் பயங்கரவாதிகளின் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நவீன சிம்பாக்ஸ் கருவி மூலம் வெளிநாட்டு அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி சிலர் சென்னையில் பேசி வருவதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பக அண்ணாநகர் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த 3 பேர் இதுபோல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அண்ணாநகரில் சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து மத்திய உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், அவர்கள் வெளிநாடுகளுக்கு அதிக நேரம் போனில் பேசியது தெரியவந்தது. அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அந்த சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள், ஏராளமான சிம்பாக்ஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.