அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சர்வதேச அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியை வருடம்தோறும் நடத்துகிறது. அறிவியல், விண்வெளி துறை சார்ந்த புதிய வடிவமைப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் மாணவர்களின் திறமைகளை கண்டறிய நடத்தப்படும் இந்தப் போட்டியில் இவ்வருடம் 33 பள்ளிகள், 58 கல்லுாரிகளைச் சேர்ந்த 91 குழுக்கள் பங்கேற்றன. சர்வதேச மாணவர் குழுக்கள், சூரிய மண்டலத்தில் காணப்படும் நிலப்பரப்பை உருவகப்படுத்தி அதை ஆய்வு செய்யும் ‘ரோவர்’ கருவியை வடிவமைத்து வெற்றிகரமாக சோதனை செய்ய வேண்டும். ஆன்லைன் வாயிலாக நடந்த இப்போட்டியில், கல்லுாரி மாணவர்களுக்கான பிரிவில், தமிழகத்தின் வேலுாரைச் சேர்ந்த ‘வி.ஐ.டி பொறியியல் கல்லூரி’ மாணவர்கள் குழு விருதை வென்றது. பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் பஞ்சாப்பை சேர்ந்த ‘டீசன்ட் சில்ட்ரன் மாடல் பிரெசிடென்சி’ பள்ளி மாணவர்கள் குழு விருது பெற்றுள்ளது.