இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு. இவர் கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராட்ட வீரர், சமூக ஆர்வலர் என பல பரிமாணங்களில் பரிமளித்தவர். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரகவும் பதவி வகித்துள்ளார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆளுநரான சரோஜினி நாயுடு, பிறந்த நாள் பாரதத்தில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவரது தந்தை, விஞ்ஞானியும் பிரபல தத்துவவியலாளரும் கல்வியாளராகவும் விளங்கிய அகோரநாத் சட்டோபத்யாயா. தாயார் வரதா சுந்தரி பிரபல பெண் கவிஞர்.
தன் 12வது வயதில் சரோஜினி நாயுடு, மெட்ரிகுலேஷன் பரீட்சையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சி பெற்றார். பதினாறு வயதில் முதன்முதலாக நிஜாம் அறக்கட்டளையின் உதவித்தொகையுடன் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரி ,கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படித்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார்.
வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், சி.பி.ராமஸ்வாமி ஐயர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். 1931ல் காந்திஜி, பண்டிட் மாளவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார் சரோஜினி. காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். 1947ல் பாரதம் சுதந்திரம் பெற்ற பிறகு உத்தரப்பிரதேசத்தின் ஆளுநராக பதவியேற்றார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் காலமானார்.
சரோஜினி நாயுடு பிறந்த தினம் இன்று