மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் நடந்த நிகழ்ச்சியில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் வரும் நாட்களில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஜக எம்.பி.க்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு அயோத்தி கோயில் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான இறுதி அனுமதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்னும் வரவில்லை.
அயோத்தி நகரம் ராம ராஜ்யத்தை நோக்கி செல்வது மட்டும் அல்ல, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஆட்சியாளர், மக்களுடன் மிக உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உறவை வைத்திருந்ததையும் அயோத்தி குறிப்பிடுகிறது. நான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அயோத்தி சென்று, ராமர் கோயிலில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகிறேன். இங்கு நடைபெறும் வளர்ச்சி திட்டங்களால், அயோத்தி மக்களுக்கு சில சிரமங்கள் இருக்கலாம். உயர்ந்த லட்சியத்துக்காக, அதை பொறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 4 முதல் 6 மாதங்களில், அயோத்தி சாலைகள், டெல்லி ராஜபாதையுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும்.