தேடுங்கள் ஓடுங்கள்
ஒரு நடன மாது ஆடும் போது மட்டுமே சலங்கை அணிகிறாள். ஆனால் ஒரு நிருபர் தூங்கும் போதும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருக்க வேண்டும். அவருக்கு சாரமுள்ள செய்திக்கு தகவல் கிடைத்தால் அங்கே உடனே செல்ல வேண்டும்.மாவட்ட நிருபராக இருந்த அவனுக்கு காலை ஆறேகால் மணிக்கு அந்தத் தொழில் நகரின் முக்கிய அதிகாரியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘‘சார், இன்னமும் ஹிந்து பேப்பர் வரவில்லையே’’.
‘‘சார் நான் நிருபர், நீங்கள் நியூஸ் பேப்பர் வரவில்லை என்று ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்’’ என்று நிருபர் சொல்லிருந்தால் அது சரியான பதில். ஆனால், பொறுப்பற்ற பதில். அடுத்த நிமிடமே நிருபர் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ஏஜென்ட் வீட்டுக்குப் போனார். ‘‘பேப்பர் எடுத்து வரும் கார் இன்னமும் வரவில்லை. வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது சாலையில் போக்குவரத்துத் தடை இருக்கலாம்’’ என்றார் ஏஜென்ட். மேற்கொண்டு தகவல் தெரிந்து கொள்வதற்காக அந்த நிருபர் காவல் நிலையத்துக்குப் போனார். அந்தக் காலை நேரத்தில் கான்ஸ்டபிள்தான் இருந்தார் ஆனால், ஒயர்லஸ் சாதனம் மூலம் பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு சொல்லப்பட்ட ஒரு தகவலை கேட்க நேர்ந்தது. அந்த தகவல் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார் என்பதே. அந்த சூடான செய்தியைக் கேட்ட அவன் 25 கி.மீ தொலைவில் உள்ள பண்ருட்டிக்கு ஸ்கூட்டரில் சென்றான்.
சம்பவ இடத்திற்கு கலெக்டரும் காவல் கண்காணிப்பாளரும் அங்கு வருவதற்கு முன்பே நிருபர் சென்றுவிட்டார். தகவல் சேகரித்தார். அப்போது அங்கே வந்த கலெக்டர் இந்த நிருபர் செய்தி சேகரிப்பதைப் பார்த்ததும் காவல் துறை அதிகாரியிடம், ‘‘இவரை போகச் சொல்லுங்கள்’’ என்றார்.
‘‘இங்கிருந்து சென்றுவிடுங்கள் பிறகு நாங்கள் உங்களை அழைத்துத் தகவல் தருவோம். இடத்தைக் காலி பண்ணுங்கள்’’, என்றார் அந்த காவல் அதிகாரி. நிருபர் அசரவில்லை. ‘‘நான் நேரடியாக தகவல் சேகரிப்பது என் தொழில் அதைத்தான் செய்கிறேன். இது சாலை, பொது இடம், உங்கள் அலுவலகம் இல்லை. நீங்கள் என்னை விரட்ட முடியாது’’ என்றார். திரட்டிய முழு தகவல்களுடன் அந்த நிருபர் தன் செய்தியை பத்திரிகையின் தலைமையகத்திற்கு தந்தி மூலம் அனுப்பினார். அதன் பிறகே வீடு திரும்பினார்.
இப்படி ஒரு சின்ன விஷயத்திற்காக எங்கோ செல்லும்போது எங்கிருந்தோ இன்னொரு முக்கியத் தகவல் கிடைத்தது. அதன் மூலம் தன் பத்திரிகைக்கு செய்தியை முந்திக்கொண்டு தந்தான். ஆகவே எந்தத் தகவலும் முக்கியம். முந்திக் கொண்டு சம்பவ இடத்திற்கு செல்வது அதைவிட முக்கியம். அதுபோலவே நிலைமையைத் துணிவுடன் எதிர் கொள்வதும் எல்லாவற்றையும் விட முக்கியம்.இது ஒரு தனி சம்பவம். தகவல்களில் சேகரிக்கச் செல்லும் நிருபருக்கு ஆபத்துகள் வரும். விருத்தாசலத்தில் ஒருமுறை ஒரு கலவரத்தை அடக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. தகவல் சேகரிக்க நிருபர் சென்றிருந்தார்.
காவலர் கூட்டத்தை நோக்கிச் சுடும்போது தானும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று நினைத்த நிருபர் தன்னுடன் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரையும் அழைத்துக்கொண்டு மணிமுத்தாறு நதியைத் தாண்டி ஓடினார்கள். இப்படி ஆபத்தான இடத்தை விட்டு வேகமாக ஓடுவதும் முக்கியம்தான். கால்களின் ஓட்டம் ஒரு புறம் இருக்கட்டும். நிருபர் எப்போதும் தன் கண்ணையும் காதையும் தீட்டி வைத்திருக்க வேண்டும். நிருபர் தன் தொழிலில் அப்போதுதான் வெற்றி பெற முடியும். தன் ஸ்தாபனத்திற்கும் சரியாக உழைக்க முடியும். நிருபர் பணிபுரிந்த ஹிந்து பத்திரிகையில் பாராட்டு விழாக்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் பற்றிய செய்தியை வெளியிடுவதில்லை என்ற கொள்கை இருந்தது.
நாற்பது வருடங்களுக்கு முன்னாள் காங்கிரஸ் மந்திரி எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி அவர்களுக்கு கடலூரில் ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. மூன்று நாட்கள் விழா. முதல் இரண்டு நாட்களுக்குச் செல்லாத அந்த நிருபர் மூன்றாம் நாள் கலந்துகொண்டார். காரணம் அந்த விழாவில் சிவாஜி கணேசன் கலந்துகொள்கிறார் என்பதால். அவர் சிவாஜி கணேசனின் ரசிகர்.விழாவின் நிறைவில் திண்டிவனம் ராமமூர்த்தி நன்றி சொன்னார். அடுத்து தேசிய கீதம் ஒலிபரப்
பாகியது. பாடலில் மூன்றாம் வரி தொடங்கும் போது அந்த விழாவுக்கு தலைமை தாங்கியிருக்க வேண்டிய மந்திரி பண்ருட்டி ராமச்சந்திரன் அரங்கில் நுழைந்தார். தேசிய கீதம் நிறுத்தப்பட்டது.
அதுவரை அந்த விழாவில் செய்தி எதுவும் இல்லை என்று நினைத்திருந்த நிருபர், மந்திரியின் தாமத வருகையால் தேசிய கீதம் நிறுத்தப்பட்டதை செய்தியாக எழுதி, எதிரே இருந்த தந்தி அலுவலகத்தில் கொடுத்தார். அந்தத் தந்தியை ஊழியர் அனுப்பத் தொடங்கியபோது இரண்டாம் முறை தேசிய கீதம் கேட்டது. நிருபர் அந்த தந்தித் தாளை திரும்ப வாங்கிக்கொண்டு, ‘மந்திரியின் தாமத வருகையால் தேசிய கீதம் இரண்டு முறை ஒலிக்கப்பட்டது’ என்று செய்தியை மாற்றி எழுதிக் கொடுத்தார். தி ஹிந்து, அதை ஒரு பெட்டிச் செய்தியாக வெளியிட்டது.
மறுநாள் நிருபரைச் சந்தித்த அந்த மந்திரி சொன்னார் “என்னை இப்படி வாரிட்டீங்களே” என்று. அதே நேரம் மந்திரியிடம் அந்த நிருபரின் நட்பு இன்றும் தொடர்கிறது. தொழில் வேறு, நட்பு வேறு.எதற்கும் தேவை சரியான ஊகம். ஊகம் பொய்த்துவிடாதபடி எதையும் சேகரிக்கும் திறமை ஒரு நிருபருக்குத் தேவை.
ஒரு முறை மந்திரி பண்ருட்டி ராமச்சந்திரன் கடலூர் வந்திருந்தார். அவர் சென்னைக்கு புறப்படும் நேரத்தில் சம்பிரதாயப்படி அவர்களை வழியனுப்பாமல் கலெக்டரும், காவல் கண்காணிப்பாளரும் ஒரே காரில் அவசரமாக எங்கோ செல்வதைப் பார்த்த அந்த நிருபர் அவர்கள் காரைப் பின்தொடர்ந்தார். பண்ருட்டி, வடலூர், விருதாச்சலம் என்று அந்த கார் போன திசையிலேயே ஸ்கூட்டரில் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் சென்றார் அங்கே என்ன நடந்தது, என்ன செய்தி கிடைத்தது. அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)