மிகக் கடுமையான பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் பாகிஸ்தான், உலக வங்கி, நட்பு நாடுகள் என அனைத்திலும் வாங்கியுள்ள கடனை அடைக்கமுடியாமல் திணறிவருகிறது. தனது நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க, அங்கீகரிக்கப்பட்ட நிவாரண தொகையில் இரண்டாவது தவணையை விரைந்து வழங்க சர்வதேச நாணய நிதியத்தை கோரியுள்ளது பாகிஸ்தான். அந்நாட்டின் மொத்த மதிப்பைவிட, அதன் கடன் சுமை அதிகம் என்பதே எதார்த்த சூழல். போதுமான நிதி இல்லாததால் மக்கள் நல திட்டங்கள் பல நிறுத்தப்பட்டும், சில குறைக்கப்பட்டும் உள்ளன. இதனால், தனது அமைச்சரவை சகாக்களுக்கும் குடிமக்களுக்கும் சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க வலியுறுத்துகிறார் இம்ரான்கான். ஆனால், தற்போது, தன் வெளிநாட்டு பயணத்திற்காக பயன்படுத்தும் வி.வி.ஐ.பி விமானத்தின் செலவுகளுக்காக, 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை கூடுதல் தொகையாக நிதி அமைச்சகத்திடம் கேட்டு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார். இது அந்த நாட்டில் பெரிய அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஜனாதிபதி ஆரிப் ஆல்வியும் வி.வி.ஐ.பி விம்னானத்தை பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.