பாரதத்தை புகழ்ந்த இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகிஸ்தானின் பஞ்சாப், கைபன் பக்துன்வா மாகாணங்கள் போன மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. அங்கு 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுப்பேன். ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு செய்ததுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு, நவாஸ் ஷெரீப், ஜர்தாரி போன்ற மோசடி பேர்வழிகள் பக்கம் அவர் சாய்வார் என்பதை நான் அப்போது புரிந்து கொள்ளவில்லை. தற்போது அவர்கள் என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவும், தகுதி இழப்பு செய்யவும் முயல்கின்றனர். தற்போது ராணுவத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக ராணுவம் செயல்படுவதை மக்கள் எதிர்க்கிறார்கள். ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஆபத்து. பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க நீதித் துறை முன்வர வேண்டும். இதற்கு நல்ல உதாரணமாக நாம் பாரதத்தை எடுத்துக்கொள்ளலாம். பாரதம் முன்னேறுகிறது என்றால், அதற்குக் காரணம் அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது தான். பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போனால் அதற்கு எதிர்காலம் என்பதே இருக்காது” என்றார்.