சட்டவிரோத கடன் நிறுவனம்

சீனாவை சேர்ந்த சிலர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சட்டவிரோதமாக குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனங்கள் துவங்கி அதில் கடன் பெறும் வாடிக்கையாளர்களிடம், அதிகப்படியான செயலாக்கக் கட்டணங்கள், அதிக வட்டி பெறுவது, வாடிக்கையாளர்களை துன்புறுத்துவது என ஈடுபட்டு வந்தனர். தங்களின் இந்திய ஊழியர்களின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி, பினாமி பெயர்களில் கேஷ் மாஸ்டர், கிரியேசி ருபி, லைகோரைஸ் டெக்னாலஜி என்பது உள்ளிட்ட சுமார் 52 நிறுவனங்களை துவக்கி நடத்தி வந்தனர். அவர்களின் வங்கி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் சீனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில், காமராஜ் மோர், தர்ஷன் சௌஹான் ஆகிய இரு ஊழியர்களை பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. 83 கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஊழியர்களின் பெயரில் கணக்குகள் தொடங்குவதற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது, அவர்களுக்குத் தெரியாமல் நிறுவனங்கள் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை மேலும் விசாரிக்க அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிறுவனங்களின் பதிவேடு ஆகியவற்றின் உதவி நாடப்பட்டுள்ளது. தலைமறைவான சீனர்களை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.