சமூக வலைத்தளங்கள், இணையங்களில் வெளியிடப்படும் சட்டவிரோத பதிவுகள், போலி தகவல்கள், சைபர் குற்றங்கள் நம் தேசத்திற்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன. இதனை தடுக்க, ஒருங்கிணைந்த விரிவான நடவடிக்கை தேவை. அதற்காக ‘ஐ 4 சி’ எனப்படும் ‘சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அறிமுகமாகும் இந்த திட்டத்தில், பொதுமக்கள் தன்னார்வலர்களாக இணைய வாய்ப்பு தரப்படுகிறது. மூன்று பிரிவின் கீழ், பொதுமக்கள் இதில் பதிவு செய்யலாம். ‘சைபர் பிளேகர்’ எனப்படும் முதல் பிரிவில் தன்னார்வலர்கள், குழந்தை ஆபாச படங்கள், பலாத்காரம், கூட்டு பலாத்காரம், பயங்கரவாதம், மதவெறி, தேசவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிக்கலாம். அடுத்து, சைபர் விழிப்புணர்வை ஊக்குவிக்க ‘சைபர் அவார்னஸ் புரமோட்டர்கள்’ செயல்படுவார்கள். மூன்றாவதாக ‘சைபர் எக்ஸ்பர்ட்’ எனப்படும் நிபுணர்கள், சைபர் குற்ற தளங்களை கண்காணித்தல், தகவல்களை பகுப்பாய்வு, புலனாய்வு உள்ளிட்டவற்றில் ஈடுபடுவர். அதே நேரத்தில், தன்னார்வலர்கள் மற்றவர்களை மிரட்டுவது, பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுவர். நல்ல நோக்கம் உள்ளவர்கள் மட்டுமே, இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளப்படுவர்.