‘பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சில காலத்திற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறிய ஒரு மேற்கோள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ரஷ்யா ஒரு தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அது படிப்படியாக முன்னேறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்து புதின் ஒருமுறை ‘யார் கோளத்தின் ஆட்சியாளராக மாறுகிறாரோ, அவர் உலகை ஆள்வார்.” என்று கூறினார். இந்தக் கோளம் வளர்ந்துவரும் வழி, அதற்கான இந்த சாத்தியக்கூறுகளை நாம் மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம் பாரதம் உலகை ஆள விரும்பவில்லை என்பதை நான் இங்கு கூற விரும்புகிறேன். வசுதைவ குடும்பகம் எனும் “உலகம் முழுவதும் ஒரு குடும்பம்” என்பதையும் உலகை வெல்ல நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்ற செய்தியையும் பாரதம் எப்போதும் வலியுறித்தி வந்துள்ளது. பாரதத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதனால் வேறு எந்த நாடும் நம்மை வெல்ல முடியாத வலிமை பெறுவோம். செயற்கை நுண்ணறிவில் முதன்மையான கவனம் செலுத்த, நாடு முழுவதும் பல டி.ஆர்.டி.ஓ தொழில்துறை கல்வி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஏ.ஐ பயன்பாடுகளை மேம்படுத்த பாதுகாப்புத் துறையால் இதுபோன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனித நாகரிகத்திற்கு இன்றியமையாதது” என தெரிவித்தார்.