மாலவன், நான்முகன் இருவரிடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஒருமுறை நிகழ்ந்தது. போட்டியில் தீர்ப்பு சொல்ல சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது சிவபிரான் , “உங்களில் யார் முதலில் என்னுடைய திருமுடியையோ அல்லது திருவடியையோ கண்டு வருகிறீர்களோ, அவர்களே சிறந்தவர்’ என்றார். உடனே மகாவிஷ்ணு வராக வடிவெடுத்து பூமியைத் துளைத்துச் சென்றார். பிரம்மன் அன்னப் பறவையாகி திருமுடியை தரிசிக்க பறந்தார்.
யுகங்கள் பல கடந்த பின்னரும் சிவனின் பாதமோ கேசமோ கண்களுக்குப் புலப்படவில்லை. அப்போது கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவிடம், பிரம்மா “நீ எங்கிருந்து வருகிறாய்?’ என்றார். “நான் சிவபெருமானின் முடியிலிருந்து விழுந்து விட்டேன். எனக்கு நினைவு தெரிந்த நாளாக கீழே தான் விழுந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் தரையைத் தொடவில்லை’ என்றது.
பிரம்மன் “தாழம்பூவே! நான் திருமுடியைப் பார்த்து விட்டதாக நீ சாட்சி சொல்ல வேண்டும் என்றார். தாழம்பூவும் ஒப்புக் கொண்டது. பிரம்மா அதை எடுத்துவந்தார். மகாவிஷ்ணு, எம்பெருமானிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மனோ செருக்குடன், “நான்தான் வென்றேன். தங்களுடைய திருமுடியிலிருந்து தாழம்பூவை எடுத்து வந்திருக்கிறேன்!’ என்றார்.
தாழம்பூவும் தலையாட்டியது. சிவன் கோபம் கொப்புளிக்க, “தாழம்பூவே, நீ பொய் சொல்லியதால் நீ இன்று முதல் என் பூஜையிலிருந்து விலக்கப்படுவாய்’ என சாபமிட்டார். “பிரம்மனே! நீ வேதம் கற்றுணர்ந்து படைப்புத் தொழில் செய்கிறார். ஆனாலும் பொய் சொன்னதால் இன்று முதல் பூவுலகில் உனக்கு கோயில்கள் இருக்காது’ என்று சபித்தார். பிரம்மா மன்னிப்புகோர மனமிறங்கி மன்னித்தார் மகேசன்.
மகாவிஷ்ணு, “இறைவா! நீ எங்களுக்கு ஆதியும் அந்தமும் இல்லாமல் காட்சி தந்தாய் நாங்கள் கண்ட அந்த ஆனந்தக் காட்சியை அனைத்த உயிர்களும் காண வேண்டும்?’ என்று வேண்டினார்.
அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி வடிவனாக லிங்கோத்பவராக காட்சி அளித்தார். முதன்முதலில் இறைவன் லிங்க ரூபத்தில் தோன்றிய அந்நாளே சிவராத்திரி. இந்நாளில் என்னை நினைத்து விரதமிருந்து இரவு கண்விழித்து வணங்குவோர்க்கு எல்லாப் பாவங்களும் நீங்கி, முற்பிறப்பில் செய்த தீவினைகளும் பொசுங்கும்!’ என்று திருவாய் மலர்ந்தருளினார் மகேசன்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி