கோவையில், ‘இட்லி அம்மா’என அன்புடன் அழைக்கப்படும் கமலாத்தாள், ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி பலரின் பசிப்பிணியை போக்கி வந்தார். இவரை குறித்து, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக கோவையில் விறகு அடுப்பு மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என்று மலிவான விலையில் விற்பனை செய்துவந்த கமலாத்தாள் குறித்து புகழ்ந்திருந்தார். அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். லாப நோக்கமில்லாமல் இதை செய்யும் அவருக்கு கோயமுத்தூரில் உள்ள பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு இலவசமாக எரிவாயு அடுப்பு வழங்கியது. இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கித்தந்துள்ளது. மேலும் அந்த நிலத்தில் கமலாத்தாளுக்கான வீடும், இட்லி கடையையும் கட்டித்தர அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.